ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தேவைக்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
நாள் தோறும் மாவட்டம் முழுமையிலிருந்தும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்து செல்லுகின்றனர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்லுகின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக பல புகார்கள் வருகின்றன.
உதாரணத்திற்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேர்ந்த தச்சு தொழிலாளி பாலசுப்பிரமணி(54) என்பவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று அங்கு பரிசோதனைக்காக பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு பணம் இல்லாததின் காரணமாக அவர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடந்த 20ம் தேதி வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவரை பார்த்தபோது அவர் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் ஸ்கேன் எடுப்பதற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் பிரிவிற்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு உடனடியாக ஸ்கேன் எடுக்க முடியாது என தெரிவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்கள் அவரின் பெயரை மட்டும் பதிவு செய்துகொண்டு செல்போன் எண்ணிற்கு மெசேஜ் வரும்போது மீண்டும் வருமாறு கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். அதன்பின் மூன்று நாட்கள் கழித்து 23ம் தேதி அவருக்கு மெசேஜ் வந்துள்ளது. அதனையடுத்து 23ம் தேதி மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்த பாலசுப்பிரமணி, ஸ்கேன் பிரிவிற்குச் சென்று ஸ்கேன் எடுத்துள்ளார். ஆனால் பரிசோதனையின் முடிவு அடுத்த நாள் பிற்பகலுக்கு பிறகு கிடைக்கும் என்றும் அதன்பிறகு வந்து பெற்றுச் செல்லுமாறு கூறியிருக்கிறார்கள். முடிவுகளை பெற்ற பிறகு அதற்கும் அடுத்த நாள் மருத்துவரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் 24ம் தேதி மருத்துவர் இல்லை. மீண்டும் அடுத்த நாள் சென்று மருத்துவரை பார்க்க வேண்டும்.
இதேபோல் சங்ககிரியைச் சேர்ந்த பெண் ஒருவரும் சிகிச்சைக்காக வந்து, பல நாட்களாக அலைக்கழிப்பதாக புகார் கூறினார். இந்த மருத்துவமனையில் ட்டூட்டி பார்க்க வரும் மருத்துவர்கள் அவர்களின் பணி நேரம் ஓரிரு மணி நேரம் மட்டுமே என்ற அளவில் தான் பணியில் இருப்பதாக நோயாளிகளாக வரும் மக்கள் கூறுகிறார்கள். மேலும் மருத்துவமனையில் சேவை மனப்பான்மையுடன் நோயாளிகளுக்காக மருத்துவர்கள் இருப்பதில்லை என பொது மக்கள் வேதனையோடு கூறுகிறார்கள்.
நாம் விசாரித்த வகையில் மூத்த மருத்துவர் சசிரேகா போன்ற சிலர் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படுகிறார்கள், பல மருத்துவர்கள் வருவதும் போவதும் தெரியவில்லை. பெரும்பாலும் பயிற்சி மருந்துவ மாணவ, மாணவிகள் ட்டூட்டி டாக்டர்களாக செயல்படுகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டெல்லாம் குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களில் ஒருவர் கூறும்போது, “மருத்துவர் மற்றும் பணியாளர் பற்றாக்குறை என்பது உண்மையே. அதனை நிவர்த்தி செய்ய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.