![Disseminated rat fever; Health Department Alert](http://image.nakkheeran.in/cdn/farfuture/gIKhRtT255k20rSN-re7oeAvmzCurTfJIO8J05QTh9Y/1688217915/sites/default/files/inline-images/a26.jpg)
கேரளாவில் பருவமழை தீவிரமாகியிருக்கும் நிலையில் அங்கிருக்கும் பகுதிகளில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்..
பள்ளி மற்றும் கல்லூரிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும். மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தமாக குளோரின் பயன்படுத்தி முறையாக கண்காணிக்க வேண்டும். பராமரிக்க வேண்டும். கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வருவதால் தமிழக - கேரள எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பரவலுக்கான கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு லேசாக காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மாவட்ட துணை சுகாதார அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகத் தரப்பிலிருந்து அறிவுறுத்த வேண்டும். பள்ளி நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் சுகாதாரத்துறைக்கு டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.