புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட எல்லையில் கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்தில் கல்லணை கால்வாயில் இன்று அதிகாலை திடீரென 50 நீளத்திற்கு கரை உடைப்பு ஏற்பட்டு வயல்வெளியில் தண்ணீர் ஓடியது. கரையை அடைக்கும் பணியில் பொதுப்பணிததுறை அதிகாரிகள், விவசாயிகள் இணைந்து சுமார் 15 மணி நேரம் போராடி உடைப்பைச் சரி செய்தனர்.
உடைப்பு சரி செய்யும் பணியின் போது தடுப்புக் கட்டைகள் உடைந்து மறுபடியும் முயற்சி செய்து அடைக்கப்பட்டது. தொடர்ந்து மாலை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் விபரங்களைக் கேட்டறிந்தார். அங்கு நின்ற விவசாயிகள் உடைப்பு ஏற்பட்டதால் எள், உளுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறினார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது, கல்லணை கால்வாய் உடைப்பை அதிகாரிகள், விவசாயிகள் இணைந்து சரி செய்துள்ளனர். தண்ணீர் மற்ற கால்வாய்களில் மாற்றி விடப்பட்டது. தொடர்ந்து அரசு நிதி பெற்று கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பயிர்ச் சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேதம் இருந்தால் நிவாரணம் வழங்கப்படும். தொடர்ந்து வழக்கம் போல தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் கரைகள் பலப்படுத்தினால் மட்டுமே போதிய அளவு தண்ணீரை கால்வாயில் கொண்டு செல்ல முடியும். அப்படி கொண்டு சென்றால் மட்டுமே கடைமடை வரை தண்ணீர் செல்லும் என்கிறார்கள் விவசாயிகள்.