Discovery of Pottery Inscriptions at Pandyan Fort

காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் பானை ஓட்டு கீறல் குறியீடுகளை சிவகங்கை தொல்படைக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர், புலவர் கா.காளிராசா,கள ஆய்வாளர் கா. சரவணன், தலைவர் நா.சுந்தரராஜன்,செயலாளர் இரா.நரசிம்மன் ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் கண்டெடுத்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர், புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது.

''சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் புறநானூறு பாடலில் இடம்பெற்ற சங்க இலக்கிய சிறப்புமிக்க பாண்டியன் கோட்டை என்னும் பகுதி உள்ளது. புலவர் ஐயூர் மூலங்கிழார் புறநானூற்றுப் பாடலில் கோட்டையின் சிறப்பையும் அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனான வேங்கை மார்பனை பற்றியும் கோட்டையை வெற்றி கண்ட பாண்டியன் உக்கிரப் பெருவழுதியை பற்றியும் சிறப்பித்து கூறுகிறார்.

Advertisment

 Discovery of Pottery Inscriptions at Pandyan Fort

அவ்வாறான இலக்கிய சிறப்புமிக்க பாண்டியன் கோட்டை ஆழமான அகழி மற்றும் நடுவில் நீராவி குளம் ஆகிய சங்க இலக்கிய கோட்டையின் இலக்கண அமைப்போடு அமைந்துள்ளது. மேலும் இக்கோட்டை மேடு 37 ஏக்கர் பரப்பளவில் வட்ட வடிவில் அமைந்துள்ளது.

இன்றும் இக்கோட்டையின் மேற்கு பகுதியில் காவல் தெய்வமாக முனீஸ்வரர் கோவிலும் தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவிலும் வழிபாட்டில் உள்ளன.

சங்க கால எச்சங்கள்:

சிவகங்கை தொல்நடைக்குழுவினர் தொடர்ந்து இப்பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். அதில் சங்க கால செங்கல் எச்சங்கள், கூரை ஓட்டு எச்சங்கள்,மண்ணால் கல்லால் ஆன உருண்டைகள். வட்டச் சில்லுகள் இவற்றிற்கெல்லாம் முதன்மையாய் மோசிதபன் என்னும் தமிழி எழுத்தில் பெயர் பொறித்த பானையோடு ஆகியன கிடைக்கப்பெற்றுள்ளன.

பானை ஓட்டு கீறல்கள் குறியீடுகள்:

தற்பொழுது பானை ஓட்டில் கீறல்கள் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மூன்று கீறல் குறியீடுகள் கிடைத்துள்ளன. இதில் ஒரு குறியீடு ஆங்கில எழுத்தில் இசட் (z) போல் உள்ளது. மற்ற ஒன்று முக்கோண வடிவில் கீழே கால்கள் வரைய ப்பட்டதைப் போல் உள்ளது. மற்றொரு குறியீடு மீன் அல்லது வில்லம்பின் முனை போன்று காணப்படுகிறது.

பொதுவாக குறியீடுகள் சிந்து சமவெளி அகழாய்வு முதல் அனைத்து இடங்களிலுமே கிடைக்கின்றன இவை மொழிக்கு முன்னதாக குறியீட்டின் வழி கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.

தமிழி எழுத்திற்கு முந்திய குறியீடுகள்:

தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளும் களஆய்வு குழிகளில் முதல் அடுக்குகளில் தமிழி எழுத்துக்களும் அதற்கு பின்னதான அடுக்குகளில் குறியீடுகளும் கிடைக்கப் பெறுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர் இதன் வழி தமிழி எழுத்திற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இக்குறியீடுகள் கருதப்படுகின்றன. இங்கு கிடைத்துள்ள குறியீடுகள் மற்ற அகழாய்வுத் தலங்களிலும் கிடைத்திருப்பது ஒத்த காலத்தை உறுதிப்படுத்துகிறது.

படுக்கைப் பாயின் வடிவமைப்பைக் கொண்ட பானை ஓடு:

அழுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அழகான வேலைப்பாடுடைய பானைகள் மற்றும் பெரிய அளவிலான பானைகளை வடிவமைத்துள்ளனர். ஒரு பானை ஓட்டின் மேற்பகுதியில் பாயை விரித்து வைத்தால் காணப்படுவதை போன்ற வடிவமைப்புடைய ஓடு ஒன்று கிடைத்துள்ளது. இவ்வாறான ஓடுகள் தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுக்க கிடைத்துள்ளன என்பது இத்தொழில்நுட்பம் பரவலாக இருந்ததை அறிய உதவுகிறது.

இன்றும் பயன்பாட்டில் குறியீடுகள்:

மக்கள் பழங்காலத்திலிருந்தே குறியீடுகளை பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றும் தொழில் சார்ந்தும் கருத்தை அறிவிப்பதற்காகவும் குறியீடுகள் பயன்பாட்டில் உள்ளன. சலவைத் தொழில் உள்ளிட்ட தொழில்களிலும் போக்குவரத்து அறிவிப்பு உள்ளிட்டவைகளிலும் குறியீடுகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

தொடர்ச்சியாக கிடைக்கும் தொல்லியல் எச்சங்கள்:

இக்கோட்டை மேட்டில் சிவகங்கை தொல்நடைக் குழு அவ்வப்போது மேற்கொள்ளும் மேற்பரப்பு கள ஆய்வில் தொடர்ச்சியாக தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வருகின்றன.

இது குறித்து தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு ஐயாவிடம் வழங்கிய விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தொல்லியல் அலுவலரால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அளித்த அறிக்கையின் படி முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்ற தகவல் சிவகங்கை தொல்நடைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்'' என்றார்.