தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜ சோழன். இவரது மகன் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி வாகை சூடினார். அதனால் அவருக்கு கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்ற சிறப்பு பெயரும் ஏற்பட்டது. இவர் கடல் கடந்து நாடுகளுக்கும் பாய்மரக் கப்பல்களை உருவாக்கி படையெடுத்துச் சென்று அந்த நாடுகளை வென்று வந்ததாக வரலாறுகள் பேசுகின்றன.
இவரது தந்தை இராஜராஜ சோழன் அழியாத சின்னமாக தஞ்சை பெரிய கோவிலை கட்டினார். ராஜேந்திர சோழன் அதே மாதிரியான பெரும் கோயில் ஒன்றை கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டியுள்ளார். இப்படி வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் அருகிலுள்ள மாளிகை மேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. கடந்த மாதம் 4ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், அகழ்வாராய்ச்சி பணிகளை தொடருமாறு ஆராய்ச்சியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி அகழ்வாராய்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த அகழ்வாராய்ச்சியில் தொடர்ந்து பழங்கால செப்பு நாணயங்கள், செப்பு ஆணிகள், இரும்பு ஆணிகள், சீன நாட்டின் பொருட்கள், கண்ணாடி, மணிகள் பொருத்தப்பட்ட சிறு சிறு ஆபரணங்கள், தங்கத்திலான காப்பு ஒன்று என பல வியப்புக்குரிய பழங்கால பொருட்கள் கிடைத்து வருகின்றன.
நேற்று அகழ்வாராய்ச்சியின் போது 25 செ.மீ. உயரம். 12 செ.மீ. அகலம் கொண்ட பெரிய மண் பானை ஒன்று கிடைத்துள்ளது. மேலும் 30 அடுக்கு செங்கற்களால் கட்டப்பட்ட அரண்மனை சுவர் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் 18 செ.மீ. ஆழத்தில் இருந்து கிடைத்துள்ளன. இந்த இடத்தில் ராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்துள்ளது. அது காலப்போக்கில் அரச வம்சம் முடிவுற்ற நிலையில், அரண்மனை சிதைந்து மறைந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சோழ மன்னர்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த பகுதிகள் அரியலூர் மாவட்டம் என்பதற்கு பல்வேறு கல்வெட்டு சான்றுகள் உள்ளன. ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெரிய கோவில் கட்டப்பட்ட போது அதற்கு சுண்ணாம்பு சாந்து அரைத்துக் கொடுப்பதற்காக கோயிலுக்கு அருகில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த பணிகள் நடந்துள்ளன. அதன் அடையாளமாக அந்தப் பகுதியில் தற்போது சுண்ணாம்புக்கல் என்ற பெயரில் ஒரு சிறு கிராமம் உருவாகியுள்ளது.
அதேபோன்று அரண்மனை மாளிகை இருந்த பகுதி தற்போது மாளிகைமேடு என அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உட்கோட்டை என்றும், காடுகளைத் திருத்தி படைகளை நிறுத்தப்பட்டதால் படைநிலை, காடுவெட்டி, என்ற கிராம பெயரும் உருவானது. அதேபோன்று சோழ மன்னர்கள் பெயரில் சோழபுரம், சோழன் மாளிகை, பராந்தக சோழனை குறிக்கும் வகையில் ஸ்ரீபுறந்தான், இடைக்கட்டு, ஜெயம்கொண்டம் என அரியலூர் மாவட்டத்தில் பெரும் பகுதி சோழ மன்னர்களின் வரலாற்றுடன் இணைந்துள்ள கிராமப் பெயர்கள் உருவாகியுள்ளன.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கல்வெட்டு ஆய்வு நூல்களை எழுதியுள்ளனர். தற்போது மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி அவைகளை எல்லாம் மேலும் உறுதிப்படுத்தும் வகையில் புதைப் பொருட்கள் கிடைத்து வருகின்றன. தமிழகத்திலுள்ள வரலாற்று ஆய்வாளர்கள் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி செல்லும் அளவிற்கு அங்கே புதையுண்ட சோழர்களின் வரலாறு அகழ்வாராய்ச்சி மூலம் வெளி வந்துள்ளது. அகழ்வாராய்ச்சி தொடரும் நிலையில் இன்னும் பல்வேறு அரிய பொருட்கள் கிடைக்கலாம். அதன்மூலம் இன்னும் பல புதிய வரலாற்று தகவல்கள் அதன் வழியாக வெளிவரும் என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.