Skip to main content

கி.பி.10ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐயனார் சிலை கண்டெடுப்பு..! 

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

Discovery of 10th century AD idol of Iyenar

 

திருவண்ணாமலை மாவட்டம், அவலூர்பேட்டை சாலையில் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காட்டுவாநத்தம் கிராமத்தில் அவ்வூரைச் சேர்ந்த பவுன்குமார் அளித்தத் தகவலின் பெயரில் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் வினோத் இணைந்து அவ்வூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள வேடியப்பன் கோவிலில் ஆய்வு செய்தனர். அங்கு சுமார் மூன்றடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்ட கற்பலகையில் கையில் செண்டு ஏந்திய நிலையில் ஐயனார் புடைப்பு சிற்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஊர்மக்கள் இந்த ஐயனாரை வேடியப்பன் என்ற பெயரில் வழிபட்டு வந்துள்ளனர்.

 

பரந்துவிரியும் விரிசடையுடன் வட்ட முகமும் இரு காதுகளிலும் பத்ர குண்டலமும் அணிந்து தடித்த உதட்டுடன் சுகாசன கோலத்தில் இடது காலை பீடத்தில் அமர்த்தியும் வலது காலை கீழே தொங்கவிட்டும் அமர்ந்துள்ளார். வலது கையில் கடக முத்திரையில் செண்டை ஆயுதமாகவும் இடது கையை தனது தொடையின் மீது வைத்தும் காட்சி தருகிறார். கழுத்தில் கண்டிகை, சவடி ஆகிய அணிகலன்களுடன் முப்புரி நூலும் கைகளில் கைவலையும் அணிந்து கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

 

இவரின் மனைவிகளான பூர்ணாவும் புஷ்கலாவும் வலமும் இடமும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். இருவரும் கரண்ட மகுடம் தரித்து காதுகளில் பத்ர குண்டலங்களுடன்  தத்தமது ஆயுதங்களுடன் காட்சி தருகின்றனர்.

 

ஐயனாரின் பாதத்தின் அருகே வேடன் ஒருவன் வேட்டையாடும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. நீண்ட தாடியுடன் தொடை வரை உடையணிந்த வேடன் ஒரு கையில் வில்லும் மற்றொரு கையில் அம்பும் தாங்கிக் கொண்டு நிற்க, வேட்டை நாய் ஒன்று இரு மான்களைத் துரத்துவது போல அழகாகக் காட்டப்பட்டுள்ளது. ஒரு மான் பயந்து பின்னோக்கி ஓட மற்றொரு மான் நாயின் வாயில் அகப்பட்டு அதன் தலை மட்டும் திரும்பிய நிலையில் அழகாகக் காட்சி படுத்தப்பட்டுள்ளது. ஐயனாரின் வாகனமான யானை இடப்பக்க தோள் அருகே அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

 

Discovery of 10th century AD idol of Iyenar

 

இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ள அணிகலன்கள் மற்றும் வேட்டை காட்சிகளை எல்லாம் கருத்தில் கொண்டு இச்சிற்ப அமைதியை வைத்து இந்த ஐயனார் சிற்பம் கி.பி 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்தியது என்று கூறலாம். இவ்வளவு அழகான ஆயிரம் வருட ஐயனார் சிலை ஆள் அரவம் அற்ற ஏரிக்கரையின் அமைதியில் அருள்பாலிக்கிறார்.

 

மேலும் இவ்விடத்திற்கு அருகே புதருக்குள் சிலை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மேலும் ஆய்வு செய்ததில் அச்சிற்பம் கி.பி. 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால விஷ்ணு சிற்பம் என்று கண்டறியப்பட்டது. சுமார் 4  அடி உயரமுள்ள இச்சிலை வழிபாடின்றி கைவிடப்பட்டதால்  முகம் மற்றும் உடல் பகுதி மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இதனை முறையாக அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்திட அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துள்ள சன்னியாசி கல் கண்டெடுப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
15th century Sannyasis find with Grantha inscription

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தலைவராகத் தலைமை ஆசிரியர்  சந்திரசேகரன், பொறுப்பு ஆசிரியராக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் படி தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப் பயணம் சென்று பார்த்தபோது அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னியாசி கல் அல்லது  கோமாரி கல் என்பது தெரிய வந்தது.

இது குறித்து ஆய்வு செய்த தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர்களான ஆசிரியர்கள் கூறும்போது, "மருத்துவ வசதி இல்லாத காலத்தில் தமிழகத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகைகள் நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டன. மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் இம்முறையிலே நோய்கள் தீர்க்கப்பட்டன. மேலும் வழிபாட்டு முறைகளும் நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டன.

15th century Sannyasis find with Grantha inscription

மாதநாயக்கன்பட்டி அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கருப்புசாமி கோவில் அருகே கிடப்பதும் சன்னியாசி கல் எனப்படும் கோமாரிக் கல் என்பது உறுதியாகிறது. இந்தக் கல்லில் முக்கோண வடிவில் மலை முகடுகள், பசு மாடு போன்ற அமைப்பு  வரையப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கல்லில் கிரந்த எழுத்துக்களில் ப்ர, பூ என்றும் பசு மாடு அருகில் சுப என்றும், அதனைச் சுற்றி நான்கு புறமும் சூலமும் போடப்பட்டுள்ளது. அதில் தூஞ்ச என்று எழுதியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன்னியாசி கல் கால்நடைகளுக்கு உடல் நலமில்லாதபோது இந்த கல்லின் அருகே கூட்டி வந்து இந்த கல்லை சுற்றி வந்து மூலிகைகளை கொடுத்து அல்லது அபிஷேகம் செய்தோ கால்நடைகளின் நோயை குணமாக்கியுள்ளனர்.

கோமாரி நோய் கால்நடைகளுக்கு அதிகமாக வந்தபோது இந்த வழக்கம் கிராமங்களில் இருந்துள்ளது. அதனால் இக்கல் சன்னியாசி கல், கோமாரிக் கல், மந்திரக் கல் என்று  அழைக்கப்படுகிறது. இது 600 ஆண்டுகள் பழமையான கல் ஆகும். இது கோவில் புனரமைக்கும் போது கடக்கால் குழியில் இருந்துள்ளது. அதனைப் பார்க்கும் போது ஏதோ எழுதி உள்ளது என்று வெளியில் எடுத்துப் போட்டுள்ளனர். எங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்று ஆய்வு செய்து பார்த்தோம். மேலும் இதனைப் பற்றிய தகவலுக்கு சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சு. ராஜகோபால் அவர்களிடம் அனுப்பி உறுதி செய்தோம்." என்றனர்.

Next Story

கலச ஊர்வலம்; அனுமதி தந்த அதிகாரிகள் - கொண்டாடிய பாமக

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் சுற்றியுள்ள கிராமங்கள் வன்னியர் சமுதாயத்தினர் பலமாக உள்ள பகுதி. வன்னியர் சங்கத்தின் எழுச்சி பெரியதாக இருந்த காலகட்டத்தில் நாயுடுமங்கலம் கூட்டுசாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் 1989ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தின் சார்பில் வன்னியர் சங்கத்தின் அடையாளம் எனச் சொல்லப்படும் அக்னி கலசம் அமைக்கப்பட்டது. பட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த மருத்துவர் ராமதாஸ், அந்த அக்னி கலசம் சிலையை திறந்து வைத்தார்.

ஆண்டுகள் பல கடந்த நிலையில், பராமரிக்கப்படாமல் இருந்த அந்த அக்னி கலசம் சிலையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவண்ணாமலை டூ வேலூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. அப்போது, இதற்கு வன்னியர் சங்கம் மற்றும் பாமக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் நாயுடுமங்கலத்தில் திரண்டு மறியல் போராட்டம் செய்தனர். சாலை விரிவாக்கம் முடிந்ததும் மீண்டும் அச்சிலை அங்கு வைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின்பு அங்கு அக்னி கலச சிலை வைக்கப்படவில்லை. இதுகுறித்து வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அக்னி கலசம் சிலை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டது என்றும் அதனால் மீண்டும் வைக்கமுடியாது என அதிகாரிகள் சொன்னதாக கூறியுள்ளனர்.

Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

தமிழ்நாடு முழுவதுமே அனுமதி பெறாமல் பல சிலைகள் உள்ளது. அதனை ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நாயுடுமங்கலம் என்கிற கிராமத்தில் வன்னியர் சமுதாய கலசம் வைப்பது சாதி பிரச்சனையை உருவாக்கும்  என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர் . ஊர் பெயர்தான் நாயுடுமங்கலமே தவிர, அங்கு நாயுடு சமுதாயத்தினர் அவ்வளவாக இல்லை. அப்படியிருக்க இத்தனை ஆண்டுகளாக வராத சாதி பிரச்சனை இப்போது எப்படி வரும்? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்தவாரம் திடீரென திருவண்ணாமலை பாமக மா.செ பக்தவாச்சலம் தலைமையில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர், அக்னி கலச சிலையை கொண்டுவந்து விடியற்காலை நேரத்தில் அதே இடத்தில் வைத்தனர். இதனை அறிந்த போலீஸார் அச்சிலையை எடுத்துச்சென்று கலசப்பாக்கம் தாலுக்கா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதுக்குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சாலை பணி முடிந்ததும் கலசத்தை வைக்கிறேன் என வாக்குறுதி தந்த அதிகாரிகள், இதுவரை வைக்கவில்லை. இதன்பின்னால் ஆளும்கட்சியின் திட்டமிட்ட அரசியல் உள்ளது. திமுக வன்னியர்களை திட்டமிட்டு புறக்கணிக்கிறது. கலசத்தை வைக்க அனுமதிக்கவில்லையென்றால் பெரும் போராட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டார். அதேபோல் இயக்குநர் கவுதமன் உட்பட வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி நாயுடுமங்கலத்தில் கூடுவோம். கலசத்தை மீண்டும் வைப்போம், திரண்டுவாருங்கள் வன்னிய சொந்தங்களே என பாமக, வன்னியர் சங்கம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தினர்.

Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்லாமல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் திருவண்ணாமலையில் குவிய தொடங்கினர். இருசக்கர வாகனங்கள், கார்களில் வன்னிய சங்க நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் திருவண்ணாமலையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள நாயுடுமங்கலத்திற்கு வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.இளங்கோவன் தலைமையில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வகுமார், முன்னாள் எம்.எல்.ஏ மா.செ கணேஷ்குமார் புறப்பட்டனர். வாகனத்தில் புதியதாக அக்னி கலசம் கொண்டுவந்தனர். தடையை மீறி கலசம் வைப்போம் என அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வருவாய்த்துறை, காவல்துறை திடீரென கலசம் வைக்க அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கொண்டுவந்த அக்னி கலசத்தை பேருந்து நிழற்கூடம் அருகே பீடம் கட்டி அதில் வைத்து வன்னியர் சங்கத்தினரும், பாமகவினரும் வெற்றி கூச்சலிட்டனர். எந்த அசம்பாவிதத்திலும் தொண்டர்கள் ஈடுப்படக்கூடாது என எச்சரிக்கை விடுத்தபடியே இருந்தனர். சிலை அமைக்கப்பட்டதும் அனைவரும் கலைந்து சென்றனர்.

பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என நான்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 1200 போலீஸார் வழி நெடுக பாதுகாப்புக்கு நின்றனர். போக்குவரத்தில் மிக முக்கிய சாலையான திருவண்ணாமலை - வேலூர் சாலையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.