திண்டுக்கல் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 2.40 லட்சம் மதிப்பிலான மூன்று மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. இதில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான ஐ.பெரியசாமி கலந்துக் கொண்டு, ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கதிரையன்குளத்தைச் சேர்ந்த சண்முகம், டி.புதுப்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி, தருமத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட செவனகரையான்பட்டியைச் சேர்ந்த முருகேசன் ஆகிய மூன்று பேருக்கும் தலா ரூபாய் 80,000 மதிப்பிலான மூன்று மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியதோடு, தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற வார்த்தையை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என எல்லோரையும் அழைக்க வைத்து, அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களை பாதுகாத்து வருகிறார்" என்று கூறினார்.