தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்த பசுபதிபாண்டியன் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி அதிகாலை அவருடைய சொந்த ஊரான திண்டுக்கல் நந்தவனம்பட்டியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப் பதிந்து, கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலாவை திண்டுக்கல் ஈபி காலனி ரோட்டில் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்து, தலையை மட்டும் துண்டித்து எடுத்துச் சென்று பசுபதி பாண்டியன் வீட்டின் வாசல் கேட்டில் வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். பழிக்குப் பழியாக நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டுவந்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த ரமேஷ்குமார் (33), மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கிலிகருப்பன் (28), செம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (22), அம்புலிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த முத்துமணி (23), இவர்களுடன் 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரும் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்கள் 5 பேரையும் திருச்சி வக்கீல் பொன். முருகேசன் ஆஜர்படுத்தினார். பின்னர் 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.