Skip to main content

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்