கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி விஜயா தம்பதியின் மகன் கோபிகிருஷ்ணன்(34). இவருக்கு அன்பரசி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ள கோபிகிருஷ்ணன் தீவிர தோனி ரசிகர். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்று அங்கு ஆன்லைன் தொழில் செய்து வந்துள்ளார்.
அங்கு சென்று தொழில் செய்தாலும் அவர் விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் துபாயில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும், துபாயில் நடைபெறும் மேட்ச்களில் தோனி விளையாடும் அனைத்து மேட்ச்களையும் தவறாமல் பார்த்துவிடுவது வழக்கம். மேலும், இவர் தனது வீட்டை முழுவதும் மஞ்சள் நிறத்தில வண்ணம் பூசி வீட்டின் முன்புறம் தோனி படமும் பக்கவாட்டில் சென்னை சூப்பர்கிங்ஸின் சிங்கப் படத்தையும் சுமார் ஒன்னறை லட்சம் செலவு செய்து வரைந்து வீட்டின் முகப்பில் ஹோம் ஆஃப் தோனி ஃபேன் என எழுதி பிரபலமடைந்தார்.
இந்த நிலையில், அதிக வட்டி தருவதாக கூறிய ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கோபிகிருஷ்ணன் தன்னுடைய பணத்தை முதலீடு செய்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், அவர் வசித்த வந்த கிராமத்தினர் சிலரையும் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறியதால் அதை நம்பிய கிராம மக்கள் சிலர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அந்த நிதி நிறுவனம் கிராம மக்களின் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், கோபி கிருஷ்ணனிடம் முறையிட்டுள்ளனர். இதில், கோபிகிருஷ்ணன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (17-01-24) காணும் பொங்கலை முன்னிட்டு கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற கோபிகிருஷ்ணனனை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பணம் கேட்டு தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் இன்று (18-01-24) அதிகாலை 4 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த கோபிகிருஷ்ணனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்து பலரது கவனத்தை ஈர்த்த கோபிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.