தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் 'வீட்டுக் கடனை கட்டவில்லை' என பெரிய எழுத்துக்களில் பெயிண்டில் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் தேனியில் நிகழ்ந்துள்ளது.
தேனி மாவட்டம் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தன்னுடைய வீட்டை அடைமானம் வைத்து மூன்று லட்ச ரூபாய் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி சூழல் காரணமாக ஒன்பது மாதமாக கடன் தவணையைக் கட்ட முடியாமல் இருந்துள்ளார். கடனைத் திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 9 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முறையாக வாங்கிய கடனை பிரபு செலுத்தி வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதமே முழு கடன் தொகையும் கட்டியதாக பிரபு தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடன் தொகையை கட்டியதால் வீட்டு பத்திரம் வேண்டும் என கேட்டுள்ளார். அப்பொழுது பிரபுவின் வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தவில்லை எனக்கூறி இரண்டு பேர் இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த பிரபு காவல் துறையினருக்கு புகார் கொடுத்து இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் 'போலீசில் புகார் கொடுத்து எங்களை அசிங்கப்படுத்தி விட்டாய். உன்னை சும்மா விடமாட்டோம்' என மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் மகேந்திரபிரபு மது போதையில் பிரபுவின் வீட்டிற்குச் சென்று ஸ்பிரே பெயிண்ட் மூலம் 'வெரிடாஸ்' நிறுவனத்தில் கடன் பெற்ற வீட்டு கடன் கட்டவில்லை' என சுவரில் எழுதியுள்ளார். இது குறித்து வீட்டு உரிமையாளர் பிரபு கேட்டபோது 'அப்படித்தான் செய்வேன்' என்று மிரட்டல் தொனியில் பேசியதாக பிரபு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.