காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான போராட்டத்தில் சி.எஸ்.கே. கேப்டன் தோனி ஆதரவளிக்க வேண்டும் என நடிகர் சிம்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி, தயாரிப்பாளர் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து, இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர்,
இன்று நடிகர் சங்கம் சார்பில் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி போராட்டம் நடைபெற்றது. திரைத்துறையிலேயே பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது, பிற போராட்டங்களில் கலந்துகொள்ளும் உடன்பாடு எனக்கில்லை. மேலும், இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் சூனியம் வைத்ததுபோல் உள்ளது. தொடர்ந்து பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
நடிகர் சங்க போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், சிஎஸ்கே வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு விளையாட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதைக் கிண்டல் செய்யும் விதமாக பேசிய சிம்பு, ஐபிஎல் போட்டி நடந்தால் கறுப்பு சட்டை அணிந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என அப்துல்கலாம் சொன்னார். இல்லை இல்லை.. தியானம் செய்யும்போது ஆன்மா சொன்னது எனக் கூறினார். ஐபிஎல் போட்டி நடைபெறக் கூடாது என்ற கோரிக்கை நியாயமானது. அதேசமயம், காவிரி போராட்டத்திற்கு சிஎஸ்கே கேப்டன் தோனி ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டுமின்றி, காவிரி நீரை கர்நாடக தாய்மார்கள் தாமாக முன்வந்து தமிழகத்திற்கு வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.