
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாகச் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலை காலமானார். மருத்துவமனையில் அவரின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். திடீர் திருப்பமாக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மருத்துவமனைக்குச் சென்று ஓபிஎஸ் மனைவிக்கு அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனிக்கு விஜயலட்சுமியின் உடல் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது முக்கிய கட்சித் தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள், திமுக மாவட்ட செயலாளர்கள், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பன்னீர் செல்வத்தின் கைகளைப் பற்றி அவருக்குத் தினகரன் ஆறுதல் தெரிவித்தார்.