Skip to main content

அதிர்ச்சியான தகவல்களைச் சொன்ன தனபால்! 

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Dhanapal gave shocking information!

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்திவருகிறது. இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமும், சசிகலாவிடம் சிறிதுகாலம் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகிறார். இவரது அண்ணன் தனபால், சமீபகாலமாக இந்த வழக்கில் பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், அவரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதனை ஏற்று இன்று கோவையில் உள்ள சி.பி..சி.ஐ.டி. அலுவலகத்தில் கனகராஜின் அண்ணன் தனபால் ஆஜராக வந்தார். 

 

அப்போது கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கனகராஜ் சகோதரர் தனபால், “கொடநாடு வழக்கு தொடர்பாக ஐ.ஜி. சுதாகர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. தற்போது இது சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. அந்த விசாரணைக்கு இன்று ஆஜராகுகிறேன். என் தம்பி அங்கு நடந்த அனைத்தையும் சொல்லியுள்ளார். இதில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பட்டியலிட்டு வைத்துள்ளேன். 

 

இதில் நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினரும், சில கூலிப்படைகளும், சில காவல்துறையினரும் உள்ளனர். சங்ககிரியில் எடப்பாடியின் மச்சான் வெங்கடேசனிடம் கொடுக்கும்போதும், சேலம் இளங்கோவனிடம் கொடுக்கும்போது சிலர் அங்கு இருந்துள்ளனர். எடுத்ததை கொடுத்துவிட்டு, பேசிய பணத்தை கேட்டபோது தம்பியை தாக்கியுள்ளனர். 

 

அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து எங்கள் சமுத்திரம் கிராமத்தில் இவர்கள் எல்லாம் மது அருந்துகிறார்கள். அதில், விஷம் கலக்கப்பட்டிருக்கிறது. இதனை அறிந்த என் தம்பி அங்கிருந்து தப்பிவிடுகிறார். மறுநாளான வெள்ளிக்கிழமை இளங்கோ இருக்கும் ஆத்தூருக்கு வந்து பணம் வாங்கிக்கும்படி சொல்லியுள்ளனர். அப்போது அயோத்திப்பட்டினம் எனும் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் மது அருந்தியுள்ளனர். அதில் அதிமுகவின் முக்கிய நபர்கள் இருந்துள்ளனர். அங்கையும் அவன் தப்பிவிட்டான். இறுதியாக அவருக்கு அதிகளவில் மது கொடுத்து விபத்தை ஏற்படுத்தி ஆத்தூர் நெடுஞ்சாலையில் போட்டுவிட்டனர். இதனை அன்றிலிருந்து சொல்லிவருகிறேன். ஆனால் நியாயம் கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி மூலம் நியாயம் கிடைக்கும் என நம்பிக்கையுள்ளது. 

 

மொத்தம் ஐந்து பேக் இருந்தது. அதில் மூன்று சங்ககிரியிலும், இரண்டு சேலத்திலும் கொடுக்கப்பட்டது. சங்ககிரியில் எடப்பாடியின் மச்சான் வெங்கடேசனிடமும், சேலத்தில் ஆத்தூர் இளங்கோவிடமும் கொடுக்கப்பட்டது. 

 

இதில், எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சஞ்சீவன், அனுபவ் ரவி, அன்பரசு, தப்புச்சி வினோத், ஆத்தூர் இளங்கோ ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர். எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் எனக்கு மருத்துவச் சான்றிதழ் கொடுத்திருக்க வேண்டும் அல்லது என்னை மனநலம் பாதித்தவர் என சொல்பவர்கள் மருத்துவர்களாக இருந்து சான்றிதழ் கொடுத்திருக்க வேண்டும். 

 

இந்த விவகாரத்தில் முதலில் ஊட்டியிலும், பிறகு ஐ.ஜி. சுதாகர் தலைமையில் சேலத்தில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, சேலத்தில் ஏ.டி.எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் என்னையும் என் தம்பியையும் காலையில் அழைத்துச் சென்றனர். பிறகு மதிய உணவு கொடுத்துவிட்டு, ஐ.ஜி. என்னை கடுமையான முறையில் தாக்கினார். என்னால் வலி தாங்க முடியாமல் அழுதபோது 108-ஐ வரவழைத்து எனக்கு ஊசி செலுத்தினர். பிறகு ஒன்றரை நாள் திங்கள் கிழமை காலை வண்டி ஏறும் வரை என்ன நடந்தது என இது வரை எனக்கு தெரியவில்லை. அதேபோல், அந்த ஒன்றரை நாளில் என்னிடம் என்னென்ன எழுதி வாங்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. 

 

இதில், ஐ.ஜி. சுதாகர், சேலம் எஸ்.பி, ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, எடப்பாடி ஆய்வாளர் சுரேஷ்குமார், முத்துமாணிக்கம் எனும் அதிகாரி இவர்களை எல்லாம் விசாரித்தால் எல்லாம் தெரியவரும். அதேபோல், 2017க்கு பிறகு கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை கவனிக்க வேண்டும். அதேபோல், இதில் விசாரணை அதிகாரியாக இருந்தவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். 

 

தடயங்களை அழித்ததாக என்மீது ஐ.ஜி. சுதாகர்தான் வழக்குப் பதிவு செய்கிறார். உண்மையில் எடப்பாடி ஆய்வாளர் சுரேஷ் குமார் மற்றும் முரளி ரம்பா ஆகியோர் என் வீட்டை சோதனை செய்ய வரும்போது என்னிடம் போன் கேட்டார்கள். அதனை அவரிடம் கொடுத்துவிட்டேன். ஐ.ஜி. சுதாகருக்கு ஒரு வீக்னஸ் இருக்கிறது. அதனை பயன்படுத்தி ஆத்தூர் இளங்கோவும், எடப்பாடி ஆய்வாளர் சுரேஷ்குமாரும் இணைந்து சுதாகருக்கு செய்துகொடுத்து, என் மீது அந்தக் குற்றச்சாட்டை மாற்றிவிடுகின்றனர். இது அனைத்தையும் சொல்லப்போகிறேன். சி.பி.சி.ஐ.டி.க்கு முழு ஒத்துழைப்பு தர தயார்” என்றார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு முற்றுப்புள்ளி?; உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

edappadi Palaniswami  says End of ADMK-BJP alliance

 

தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். இல்லத் திருமண விழா இன்று (19-11-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

 

அப்போது அவர், “அதிமுக சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுக, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டது என்று தெளிவாக அறிவித்து விட்டோம். மீண்டும் தெரிவிக்கிறேன், அதிமுகவுக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், அதிமுகவின் இந்த முடிவை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, வேண்டுமென்றே திட்டமிட்டு பா.ஜ.க.வுடன் நாங்கள் மீண்டும் கூட்டணி வைப்போம் என்று பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது திட்டமிட்ட ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். 

 

காங்கிரஸும், திமுகவும் இணைந்து கொண்டுவந்த நீட் தேர்வை தற்போது எதிர்ப்பதும் அந்த இரு கட்சிகள் தான். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மன்னராட்சி முறையைப் போல, திமுக குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர். திமுகவில் கட்சி முன்னோடிகளுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பில்லை. அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும், அதிமுக தான் வெற்றி பெறும்” என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“கால் வைக்கும் இடமெல்லாம் ஓபிஎஸ்க்கு கண்ணி வெடிதான்...” - ஜெயக்குமார் கிண்டல்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

"Everywhere we set foot is a minefield for OPS"- Jayakumar teased

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் பூதாகரமாகி ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கில் ஓபிஎஸ் அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையைத் தொடர்ந்து நேற்று ஓபிஎஸ்-இன் காரின் முகப்பில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “என்றாவது கடல் வற்றுமா? அண்ணாமலையை பொறுத்தவரை எப்பொழுதுமே ஒரு புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். கொக்கு காத்திருக்கும் ஆனால் கடல் எப்பொழுது வற்றி எப்ப கொக்கு கருவாடு சாப்பிடும். அதை முதலில் கேளுங்கள். கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு குடல் வற்றி செத்ததாம். என்னைக்கும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிதான். நடக்காத விஷயத்தை பாஜக பேசி வருகிறது'' என்றார்.

 

தொடர்ந்து ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, ''வடிவேலு சொல்வார், ‘கால் வைத்த இடம் எல்லாம் கண்ணி வெடிதான்’ என்று, அது மாதிரிதான் ஓபிஎஸ்க்கு இன்று நடந்துகொண்டிருக்கிறது. சட்டத்தை யாரும் மீறவில்லை. 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சீராக சென்று கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றம் அங்கீகாரம் கொடுத்துள்ளது; உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது; எலக்சன் கமிஷன் அங்கீகாரம் கொடுத்துள்ளது. இப்படி அங்கீகாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ள போது வீணாகக் குழப்பம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஓபிஎஸ் சென்று கொண்டிருக்கிறார். அவர் எங்கே போனாலும் நீதி, நேர்மை, நியாயம், சட்டம் எல்லாம் எங்கள் பக்கம் இருப்பதால் எல்லா வெற்றியையும் நாங்கள்தான் பெறுவோம்.'' என்றார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்