Skip to main content

“இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது” - நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

"Nature should not be destroyed and development projects should not be carried out" - Court instructs!

 

இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை இரண்டாவது திட்டத்தை அமல்படுத்துவதற்காக, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம், செங்கல்பட்டு மாவட்டம், படூர் கிராமத்தில் உள்ள கல்லேரி எனும் ஏரியை மணல் மூலம் நிரப்புவதாகவும், இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, படூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்த தாசில்தாருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளதாகவும், ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

 

மாநில அரசு நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், நீர்நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்குப் பதில் மேல்நிலை சாலை அமைக்கலாம் எனவும், இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தினர். பின்னர், வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்