திருச்சி மாநகரில் நேற்று (30.07.2021) 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை தொடர்பான பொருட்களைக் காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து, அதைப் பதுக்கிவைத்திருந்த 5 பேரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்ட குழு திருச்சி காந்தி மார்க்கெட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இயங்கிவரக்கூடிய கடைகளிலும் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் 27 கிலோ புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்ததோடு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006இன்படி 97 கடை உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதுபோன்ற உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கு 95 85 95 95 95 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்’ என்றும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவர்களுடைய கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.