நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியைக் கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி (03.07.2024) ராஜினாமா செய்திருந்தார். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தைச் சரவணன் அளித்தார். இந்தக் கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் நெல்லை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று (05.08.2024) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராகக் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் என்பவரை திமுக அறிவித்திருந்தது. அதே சமயம் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பவுல்ராஜ் என்பவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். நெல்லை மாநகராட்சியில் 44 திமுக கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் 7 பேர் என திமுகவிற்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அதோடு மேயர் தேர்தலில் வெற்றி பெற குறைந்தபட்சம் 28 வாக்குகள் தேவை என்பதால் நெல்லை மேயராக கிட்டு தேர்வு செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நண்பகல் 12.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில் 54 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்கத் தாமதமாக வந்த முன்னாள் மேயர் சரவணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இவர் 12.10 மணியளவில் தேர்தல் நடைபெறும் ராஜாஜி அரங்கத்திற்கு வருகை தந்த நிலையில் அங்கேயே காத்திருக்கிறார்.