வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டாவில் உள்ள சிக் ஷா கேந்திரா என்கிற மெட்ரிக் மற்றும் ஐ.சி.எஸ்.ஏ பள்ளியில் வெட்டுவாணம் கிராமத்தை சேர்ந்த நட்சத்திரா என்கிற 4 வயது சிறுமி எல்.கே.ஜி படித்து வந்தார். அந்த மாணவி டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடந்த 15ந்தேதி இறந்தார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை நடத்திய தனித்தனி விசாரணையில் அந்த குழந்தை படித்த பள்ளியில் இருந்துதான் டெங்கு கொசு உற்பத்தியாகி அது கடித்து அந்த மாணவிக்கு டெங்கு வந்து மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் என்பதை ஆய்வுகள் மூலம் கண்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து அந்த பள்ளி சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக குற்றம்சாட்டி, பள்ளிக்கொண்டா பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் தங்களது பகுதியை சுத்தமாக, தூய்மையாக, நீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியும், அதனையும் மீறி செயல்பட்டு டெங்கு பரவ காரணமாக இருந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.
பொதுசுகாதார சட்டம் 1939ன் படி, திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016ன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 24 மணி நேரத்தில் அபராதம் செலுத்த வேண்டும், பள்ளி பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ்சும் விடப்பட்டுள்ளது.
பிரபலமான பள்ளி மீது நடவடிக்கை எடுத்துயிருப்பது மற்ற பள்ளி, கல்வி நிறுவனங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.