Skip to main content

டெங்கு பாதிப்பு; மருத்துவர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Dengue issue Govt order for doctors

 

டெங்கு காய்ச்சல் தொடர்பாக மருத்துவர்களுக்குத் தமிழ்நாடு மருத்துவத்துறை இயக்குநரகம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உயர் அலுவலர்களுடன் கடந்த 12 ஆம் தேதி, மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட அளவிலான மருத்துவ அலுவலர்கள், மருத்துவத்துறை இணை இயக்குநர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் கடந்த 16 ஆம் தேதி டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஓமந்தூரார் மருத்துவமனையில் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

 

அதே சமயம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான கொசு உற்பத்திக்குக் காரணமான தனி நபர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பதற்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதன் முறையாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும். அதன் பின்னர் கொசு உற்பத்திக்குக் காரணமான மூல காரணத்தைச் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் பொது சுகாதாரச் சட்டத்தின்படி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவத்துறை இயக்குநரகம் சார்பில் மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் டெங்கு பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட டெங்கு பாதிப்பு தடுப்பு அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்து தகவல் அளிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விளையாட்டு வீராங்கனைகளுக்குக் காசோலைகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி!

Published on 11/07/2024 | Edited on 12/07/2024
Minister Udhayanidhi gave checks to sport swomen

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நவம்பர் 10 முதல் 17 வரை உலக கேரம் போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் சார்பில் கே.நாகஜோதி, எம்.காசிமா, வி.மித்ரா என மூன்று கேரம் விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள 3 விளையாட்டு வீராங்கனைகளுக்கும், பயிற்றுநர் மரியா இருதயத்திற்கும் செலவீனத் தொகையாக தலா ரூ.1.50 லட்சத்திற்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் நியூசிலாந்தில் ஜூலை 16 முதல் 19 வரை நடைபெற உள்ள ஜூனியர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள ஜாய்ஸ் அஷிதாவுக்கு செலவீனத் தொகையாக ரூ.2.00 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விளையாட்டு வீரர்கள் சாதிக்க, வறுமை தடையாகக் கூடாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நோக்கம். அந்தத் தடையை நீக்க, தொடங்கப்பட்டதே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பிறருக்கு உதவவும், உதவிகளைப் பெறவும் இந்த இணைப்பில் சென்று தகவல்களை அறியலாம்: https://tnchampions.sdat.in/home” எனத் தெரிவித்துள்ளார்.  

Next Story

அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
New laws brought into force CM M K Stalin order

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களின் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில் மத்திய அரசால் அவை ‘பாரதிய நியாய சன்ஹிதா 2023’, ‘பாரதிய நாகரிக் கரக்ஷா சன்ஹிதா 2023’ மற்றும் ‘பாரதிய சாக்ஷியா சட்டம், 2023’ என மாற்றப்பட்டு 01.07.2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 

 New laws brought into force CM M K Stalin order

நாடாளுமன்றத்தில் 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள விருப்பமில்லாமல் மத்திய அரசு அவசர கோலத்தில் இச்சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றியது. நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தினைப் பிரதிபலிக்கும் இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைத் தெளிவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 17-6-2024 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படைப் பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு மாநில அரசுகளிடமிருந்து முழுமையாக கருத்துக்களைப் பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும் முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். 

 New laws brought into force CM M K Stalin order

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (08.07.2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர் காவல்துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைத்திட  சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம். சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

The website encountered an unexpected error. Please try again later.