வேலூர் மாவட்டத்தில் மிக வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை இப்போது தான் தொடங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். அதுவும் வேலூர் மாநகராட்சி உட்பட சில நகராட்சிகளில் மட்டுமே டெங்குவை கட்டுப்படுத்த சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் 700 பேருக்கு அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். ஆனால் இந்த எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமான மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில், பள்ளிகொண்டா அம்பேத்கர் நகர் பகுதியில் வசிப்பவர் சரண் ராஜ்- மோனிகாராணி. இந்த தம்பதிகள் கூலி வேலை செய்கின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதில் மூத்த மகள் நட்சத்திரா. இந்த குழந்தை தனியார் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில் நட்சத்திராவுக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்துள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளன. அங்கு மூன்று நாட்களுக்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் குழந்தையின் பெற்றோர் தனியார் மருத்துவமனையான நாராயணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மீண்டும், சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நட்சத்திரா அக்டோபர் 15- ஆம் தேதி நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுப்பற்றிய தகவல் தெரிந்தும் அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் என யாரும் வந்து பார்வையிடவில்லை என வேதனைப்படுகின்றனர் அப்பகுதி மக்கள்.