மக்களவை தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 12 தாசில்தார்கள் காஞ்சிபுரம், சேலம், கடலூர் மாவட்டத்திற்கு அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வட்டாட்சியர்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றத்தை கண்டித்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் வட்டாட்சியர் சங்கம் சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், விருத்தாசலம் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பணி செய்த இடத்திலேயே அவர்களுக்கு பணியை வழங்க வலியுறுத்தியும், மற்ற மாவட்டங்களுக்கும் மாற்றுவது கண்டித்தும் முழுக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"தேர்தல் ஆணையம் வருவாய்த் துறையில் பணியாற்றும் வட்டாட்சியர்களை வேறு மாவட்டங்களுக்கு பணி மாற்றம் செய்துள்ளது சட்டத்துக்கு விரோதமானது. மாவட்டத்திற்குள் பணி மாற்றம் செய்ய வேண்டும். மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டங்களுக்கு பணி மாற்றம் செய்தால் தேர்தல் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே இந்த இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தினர்.