Skip to main content

சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூட வலியுறுத்தல்… வட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை…

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

Demand for closure of limestone mines

 

 

அரியலூரில் வட்டாட்சியர் முன்னிலையில் செட்டிநாடு ஆலை அத்துமீறி நடத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூட வலியுறுத்தும் போராட்டக்குழுவினர், ஆலை நிர்வாக அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

கடந்த சில மாதங்களாகவே சுற்றுச்சூழல் விதிமீறல் நடைபெறுவதாக கூறி கீழப்பழுவூரில் இயங்கும் செட்டிநாடு ஆலையை கண்டித்து சுவரொட்டிகள் அடித்து போராட்டம், கையெழுத்து இயக்கம், தமிழக முதல்வருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அனுப்பும் இயக்கம், காத்திருப்பு போராட்டம் என தொடர்ந்து போராட்டம் நடந்ததை ஒட்டி கடந்த 28/8/2020 அன்று போராட்டக்குழுவினர் உடன் அரியலூர் வட்டாட்சியர் சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

 

போராட்டக்குழுவினர், விதிமீறலுடன் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை எடுப்பதாக குற்றஞ்சாட்டினர். மேலும் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது கீழப்பழுவூரில் இயங்கும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை ஆய்வு செய்து விதிமீறல் கண்டறியப்பட்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 

கீழப்பழுவூரில் இயங்கும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் ஓடை வாரியை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். மேலும் 3 இடங்களில் காற்று மாசு அளவீட்டு கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விபத்தை ஏற்படுத்துகின்ற சுண்ணாம்புக்கல் லாரிகளால் அன்றாடம் பல உயிர் போகிறது எனவும் சுண்ணாம்புக்கல் லாரிகள் இயக்கத்தினை அளவுக்கதிகமாக லாரிகளில் ஏற்றிச் செல்லும் சுண்ணாம்புக்கல் சாலையில் கொட்டிக் கொண்டே செல்வதால் விபத்துக்கள் நடப்பதாகவும் உயிர்பலி நடக்காத வண்ணம் சம்மந்தபட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து விபத்தில்லா உயிர்பலி இல்லாத அரியலூர் மாவட்டத்தை உருவாக்கிட நடவடிக்கை வேண்டும் எனவும் போராட்டக்குழுவினர் வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். கனிம வளத்துறை அதிகாரிகள்  ஆய்வு செய்து விதிமீறி செயல்படுவதாக ஆய்வில் தெரிய வந்தால் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. வெட்டி முடிக்கப்பட்ட காலாவதியான சுரங்கங்களில் மியாவாக்கி காடுகளை உருவாக்கி சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. வட்டாட்சியர் சந்திரசேகரன் முன்னிலையில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  பேச்சுவார்த்தையின்போது கனிம வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சிமெண்ட் ஆலை நிர்வாக அதிகாரிகள் போராட்டக்குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமரன் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், பழுவேட்டரையர் பேரவை தலைவர் கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிமெண்ட் ஆலையில் லாரி மோதி டிரைவர் பலி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

private cement factory lorry driver incident karur

 

சிமெண்ட் ஆலையில் லாரி மோதி லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாவட்டம் புலியூரில் தனியார்  சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 46) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை லாரியில் இருந்து சாம்பல் லோடு இறக்கும் போது பின்புறமாக வந்த மற்றொரு லாரி கண்ணன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

 

இதையடுத்து அவரை சக பணியாளர்கள் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கண்ணனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பசுபதிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

Next Story

மிரட்டும் சிமெண்ட் ஆலை நிர்வாகம்; போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

ariyalur cement factory versus farmers issues 

 

அரியலூர் மாவட்டத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. அதில் ஆலத்தியூர் கிராமத்தில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலை ஒன்றுக்கு புதுப்பாளையம் கிராமத்தில்  சுண்ணாம்புக்கல் தோண்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட சொந்தமான நிலம் உள்ளது. இந்தப் பகுதியில் விற்பனை செய்யப்படாத பல விவசாயிகளுடைய விளைநிலங்களும் குடியிருப்புப் பகுதிகளும் மிக அருகில் உள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் சுண்ணாம்புக்கல் சுரங்கம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

அதேபோல், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான வெங்கடாசலபதி, அவரது மனைவி தமிழரசி, திருவேங்கடம், அவரது மனைவி சந்திரகலா, சீனிவாசன், அவரது மனைவி சூரியகலா, பூலோகம் ஆகியோர் புதிய சுரங்கம் வெட்டுவதால் தங்களது விவசாய நிலத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் வற்றி போர்வெல்லில் தண்ணீர் வருவதில்லை. விவசாய நிலங்களில் புழுதிகள் படிந்து பயிர்கள் சேதம் அடைகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து சிமெண்ட் ஆலை நிர்வாகத்தின் புகாரின் பேரில் அங்கு வந்த தளவாய் காவல்நிலைய போலீசார் மேற்படி விவசாயிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் கொண்டு வந்து அடைத்தனர். அதன் பின்னர் கைது செய்ததற்கான காவல் பதிவேட்டில் விவசாயிகள் கையெழுத்து போடாமலும் உணவு சாப்பிட மறுத்தும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் விவசாயிகள் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் எங்களது நிலங்களை விற்று விட்டு வெளியேறச் சொல்லி சிமெண்ட் ஆலை நிர்வாகம் மிரட்டுவதும் போலீசாரை வைத்து பொய் வழக்குப் பதிவு செய்தும் நடைபெற்று வருகிறது. நாங்கள் வாழ்வதா அல்லது குடும்பத்தினரோடு தற்கொலை செய்து கொள்வதா என்ற நிலையில் உள்ளோம்" என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

தங்களது வாழ்வாதாரப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது அரியலூர் மாவட்ட விவசாயிகளிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலைகளால் விபத்துகள், உயிரிழப்புகள், அரசு விதிமுறைகளை மீறி சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டுவதால் பல்வேறு பாதிப்புகள் என விவசாயிகளும் பொதுமக்களும் தினசரி போராட்ட வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.