விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடு! என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.
டெல்லி எல்லைக்குள் விவசாயிகளை நுழையவிடாமல் மத்திய அரசு கம்பிவேலி தடுப்புகளையும் தடுப்பு சிமெண்ட் கட்டைகளையும் வைத்து தடுத்துப் பார்த்தனர். ஆனால் விவசாயிகள் தடுப்புகளை தாண்டிச் செல்ல முயன்றனர். அதனால் தடுப்பு சுவர்களை எழுப்பி விவசாயிகளை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீர், ரப்பர் குண்டுகளையும் மழைபோல வீசி தாக்கினர். இந்த தாக்குதலின் போதே பேச்சுவார்த்தையும் நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் நடந்த தாக்குதலில் கியான்சிங் என்ற 65 வயது விவசாயி பலியானார்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக டெல்டா மாவட்டத்திலும் போராட்டம் நடத்த முடிவு செய்து நாளை காலை புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லையான ஆவணம் கைகாட்டியில் நான்கு சாலைகளிலும் டிராக்டர்களில் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் செய்ய தயாராகி வருகின்றனர். இதே போல தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்த ஆலோசித்து வருகின்றனர்.