Skip to main content

“தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” - முதல்வர் எச்சரிக்கை!

Published on 16/02/2025 | Edited on 16/02/2025

 

“Delhi will have to see the individuality of Tamils” - Chief Minister warns!

மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கான நிதிகளைக் கொடுப்பதில்லை. குறிப்பாகப் பேரிடர் நிவாரண நிதி, கல்விக்கான நிதிகளை ஒன்றிய அரசு கொடுக்க மறுக்கிறது எனத் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவலில், ‘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் ரூபாய் 2,401 கோடி மத்திய அரசு விடுவிக்கவில்லை. 2023-2024ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடி அதேபோல், 2024-2025ஆம் ஆண்டுக்கான தவணைத் தொகை 2,152 கோடி ரூபாய் எனத் தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக் கூறுகளை நிறைவேற்ற மத்திய அரசு நிதி தரவில்லை.

திட்ட ஏற்பளிப்பு குழு அங்கீகரித்த மத்திய அரசின் 60 சதவீத பங்கான ரூபாய் 2,152 கோடி இதுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தவிர்த்துப் பிற மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 17,632 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது' எனத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் 'தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும்' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ''தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா? ஏற்றால் தான் நிதி’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘அவர்கள் இந்திய அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கு வர வேண்டும்’ (They have to come to the terms of the Indian Constitution) என்கிறார் மத்திய கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையைச் சட்டத்தின் ஆட்சி (rule of law) என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?. மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. அதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!. ‘மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது’ என்று பிளாக்மெயில் (blackmail) செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்