Skip to main content

பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்த முடிவு! அமைச்சர் நேரு சூசகம்!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

Decided to raise bus ticket prices! Minister Nehru hints!

 

மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். 


சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சேலத்தில் வெள்ளிக்கிழமை (மே 13) நடந்தது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இக்கூட்டம் நடந்தது. தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஆத்தூரில் மே 18ம் தேதி நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 


அமைச்சர் நேரு பேசியது; மோசமான நிதிநிலையிலும், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். அதிமுக ஆட்சியில் வைத்துவிட்டுச் சென்ற டெண்டர் தொகைக்காக தான் கடன் வாங்க வேண்டியுள்ளது. திமுகவின் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட எதிர்த்தால்தான் அரசியல் வாழ்வு என்று பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். திமுகவின் தொடர் வெற்றிகள், அனைவரின் கண்களையும் உறுத்துகிறது. விரைவில் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு நேரு பேசினார். 


இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப, சிலவற்றின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்'' என்றார். 


சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.