“நீங்க செத்துட்டீங்க.. கவர்மெண்ட் ரெக்கார்ட் சொல்லுது.. உங்களோட குடும்ப அட்டையை முடக்கிட்டோம். முதலமைச்சர் நிதியோ, மளிகைப் பொருளோ உங்களுக்கு கிடையாது..” சிவகாசி, ஆலங்குளம் பகுதி கரிசல்குளம் ரேஷன் கடைக்கு குடும்ப அட்டையை எடுத்துவந்த முதியவர் காளிமுத்துவிடம் அங்கிருந்த பெண் ஊழியர் கூலாகச் சொன்னார். (அந்த முதியவரை பெண் ஊழியர் ஒருமையிலேயே பேசியுள்ளார்).
“அம்மா.. நான் சாகல.. உங்க கண்ணுக்கு முன்னால உசிரோடதானே நிக்கிறேன்..” என பரிதவித்தார் காளிமுத்து.
“உங்க நியாயத்தை தாலுகா ஆபீஸுக்குப் போயி பேசுங்க..” என விரட்டினார் அந்த ஊழியர்.
தாலுகா அலுவலகம் சென்ற காளிமுத்துவிடம் வி.ஏ.ஓ.-வை பார்க்கச் சொன்னார்கள். வி.ஏ.ஓ.வோ “என்கிட்ட எதுக்கு வர்றீங்க? தாலுகா ஆபீஸுக்குப் போங்க..” என்று எரிந்து விழுந்தார். நான்கு வாரங்கள் அலைக்கடித்துவிட்டு, “விருதுநகர் கலெக்டர் ஆபீஸுக்குப் போங்க..” என்று தாலுகா அலுவலகம் காளிமுத்துவிடம் கூற, மாவட்ட ஆட்சியர் அலுவலகமோ சென்னையைக் கை காட்டியிருக்கிறது.
அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கைகளால் நொந்துபோன காளிமுத்து, “வீட்டுக்காரம்மா இல்ல. எனக்கு வேற வழியில்ல. 100 ரூபாய்க்கு வாட்ச்மேன் வேலை பார்த்து ஏதோ வயித்த கழுவுனேன். நாலு வாரமா அதிகாரிகள பார்க்க அலைஞ்சதுல அந்த வேலையும் போச்சு. உசிரோட இருக்கும்போதே செத்துட்டேன்னு ரெக்கார்ட் பண்ணிட்டாங்க. இனி, பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்.” என்றார் விரக்தியுடன்.
தனது புகாரை, வெம்பக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி, தன்னுடைய ஸ்மார்ட் கார்டை பயன்பாட்டுக்கு கொண்டுவர காளிமுத்து கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வெம்பக்கோட்டை தலைமை வட்ட வழங்கல் அலுவலர் சிவானந்தத்திடம் பேசினோம் “நான் இங்கே ஜாய்ன் பண்ணி ரெண்டு மாசம்தான் ஆகுது. அதுக்கு முன்னால ஏதோ பெயர் மாறிருச்சு போல. இப்பக்கூட வாங்கய்யா.. வந்து ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க. ஸ்மார்ட் கார்டு வாங்கித் தர்றோம்னு சொன்னேன். ஏன்னு தெரியல. அவரு வரமாட்டேங்கிறார்.” என்றார்.
காளிமுத்துவோ “இத்தனை நாளு என்னை அலையவிட்டுட்டு, இப்ப பத்திரிகைகாரங்க கேள்வி கேட்டதும், கார்டு தர்றேன்னு சொல்லுறாங்களா? அவங்க ஆபீஸுக்கு நான் அலைஞ்சது போதும். கார்டை எங்கே வாங்கணுமோ, அங்கே வாங்கிக்கிறேன். என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர சாகடிச்சிருக்காங்களோ?” என்று புலம்பினார்.
காளிமுத்து போன்றவர்களை செத்துச் செத்துப் பிழைக்க வைக்கிறது அதிகாரிகளின் அலட்சியம்!