நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் ஸ்டார் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் இன்று மனுத்தாக்கல் செய்தார். செனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகம் 8ல் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிற்றரசு வெற்றியழகன், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.