திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் இராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மனைவி லெட்சுமி அம்மாள். இவர்களுக்கு பிறந்த சில ஆண், பெண் குழந்தைகள் ஏதோ ஒரு காரணத்தால் இறந்துபோக மிஞ்சியது யமுனம்மாள் என்கிற ஒரு பெண்குழந்தை மட்டுமே. யமுனம்மாள் சிறுவயதில் இருக்கும் போதே, இவரது தந்தை ஆண்வாரிசுக்காக இன்னொரு திருமணம் பண்ணிக்கவா என்று லட்சுமி அம்மாளிடம் கேட்க அவரும் மனமுவந்து தனது உறவுக்கார பெண்ணையே இரண்டாம் திருமணம் செய்துவைத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து லட்சுமி அம்மாள் தனது மகள் யமுனம்மாளை 10 ஆம் வகுப்புவரை படிக்கவைத்து திருமணமும் செய்துவைத்தார். பின்னர் லட்சுமியம்மாள் மகள் வீட்டிலேயே வசித்தார். இந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக ஜூன் 11 ஆம் தேதி லட்சுமியம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து மறுநாள் லட்சுமியம்மாளுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. அப்போது லட்சுமியம்மாளுக்கு ஆண் வாரிசு இல்லாததால் யார் கொள்ளி போடுவது என்று ஒரு பிரச்சனை ஏற்பட்டது. சிலர் நாங்கள் செய்கிறோம் என்று முன்வர அங்கு சலசலப்பு ஏற்பட்டது. எனது தாய்க்கு நான்தான் ஒரே மகள் அதனால் நான் கொள்ளிவைக்கிறேன் என்று யமுனா முன்வந்துள்ளார். அப்போது ஊர் பெரியவர்கள் பெண்கள் மயானத்திற்கு வந்து கொள்ளி வைக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். என் தாய்க்கு நான் கொள்ளிவைபேன் என்று ஆவேசமாக கூறிய யமுனா அதற்கான ஏற்படுகளை செய்யத் தொடங்கினார்.
அதன்படி தாயின் இறுதி ஊர்வலத்தின் முன்பாக தீச்சட்டி ஏந்தியபடியே மயானம் சென்றார். எரிக்க தயார் செய்யப்பட்ட தன்தாயிக்காக பனிக்குடம், மண்குடம் உடைத்து இறுதிச் சடங்கை நிறைவேற்றினார். யமுனம்மாள் இந்தச் செயலை அக்கிராம மக்கள், வெளியூரில் இருந்து வந்த உறவினர்கள், நண்பர்கள் பலரும் அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் பார்த்தனர்.
ஆட்சியதிகாரம் மூலமாக பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட தமிழ்நாட்டில் தான் இன்றளவும் பெண்களை மயனத்திற்கு வரக்கூடாது, ஆண் பிள்ளை இல்லாமல் இறந்துப்போன தங்கள் தாய் தந்தையருக்கு பென்கள் கொள்ளி வைக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடுகள் இன்றளவும் உள்ளன. ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்காத தாய் தந்தையர் இறக்கும்போது, அவர்களுடைய பெண் பிள்ளைகள் தங்களது தாய் தந்தையருக்கு கொள்ளி வைக்க தங்களது உறவினர்களிடம் கெஞ்சும் நிகழ்வுகள் காணும் பொழுது இறப்பைத் தாண்டியும் அவர்களின் கெஞ்சல் மனதை உருக்க வைக்கும். ஆனால், கலைஞர் பிறந்த மண்ணில் காலத்தால் மறக்கமுடியாத சம்பவம் யமுனம்மாள் தனது தாய்க்கு இறுதி சடங்கு செய்துள்ளார். இது போன்ற நிகழ்வு திக்கெட்டும் பரவ வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள் என்கின்றனர் பெரியாரை பின்பற்றுவபவர்கள்.