Skip to main content

‘அப்பா நான் வீடியோல தெரியுறனா’ - நொடிப்பொழுதில் பறிபோன மகிழ்ச்சி; மனதைக் கணமாக்கும் சம்பவம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

குழந்தைகள் கண்முன்னேயே பெற்றோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவர்கள் குளிப்பதற்கு முன்பு எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்துள்ள குழந்தை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜனார்த்தனன் - பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும், மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் சென்ற ஜனார்த்தனன், அங்கிருந்து மேலப்பாறை பகுதிக்கு சென்றுள்ளார்.

 

குழந்தைகள் இருவரையும் ஒரு பாறையில் அமர வைத்துவிட்டு மனைவியுடன் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார். அதற்கு முன்பாக தனது குழந்தைகளை நீர் குறைந்த அளவில் இருக்கும் பகுதியில் இறக்கி நீச்சல் அடிக்க விட்டு வீடியோவாக பதிவு செய்தார். அப்பொழுது அவரது குழந்தைகள் 'அப்பா நான் வீடியோவில் தெரிகிறேனா' என சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

அதனைத் தொடர்ந்து குழந்தைகளை பாறை மேல் மேலே அமர வைத்துவிட்டு ஜனார்த்தனன், பவித்ரா ஆகிய இருவரும் ஆற்றில் இறங்கி குளித்த பொழுது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். இதனை கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் கதறி அழுதுள்ளனர். அவர்களது அழுகுரலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்க ஆற்றுக்குள் இறங்கினர். ஆனால் அதற்கு முன்பாகவே ஜனார்த்தனனும் அவரது மனைவி பவித்ராவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவர்கள் ஆற்றில் குளிப்பதற்கு முன்னால் எடுத்த அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாதயாத்திரை விபத்தில் பலியான 5 பேர்; நிவாரணத் தொகையை வழங்க அமைச்சர்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
5 lose their live in padayatra accident; Ministers to provide relief amount

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் பலியான 5 பக்தர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுகுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் வளப்பக்குடி கிராமம் அருகே நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கண்ணுகுடிப்பட்டி என்கிற ஒரே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37), மோகனாம்பாள் (27), மீனா (26), தனலட்சுமி (36) ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் நடந்து சென்ற சங்கீதா படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் கண்ணுக்குடிப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர். நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு; துண்டிக்கப்பட்ட கிராமம்  - மக்கள் அவதி 

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Due to the flood in river traffic in Paris was cut off and  villagers suffer

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தெங்குமரஹாடா மலைக்கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்தை சென்றடைய மாயாற்றை கடக்க வேண்டும். மலைக்கிராமத்தில் வசிக்கும் வியாபாரிகள், பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சத்தியமங்கலம் வந்து செல்வது வழக்கம். மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்தச் சமயம் ஆபத்தை உணராமல் பரிசலில் மக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கோவை, நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாயாற்றில் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று(17.7.2024) காலை மாயாற்றில் 10 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருந்த நிலையில் இன்று(18.7.2024) காலை 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டப்படி நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் இன்று 2-வது நாளாக மாயாற்றில் பரிசல் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பரிசலை முற்றிலும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் இன்று 2-வது நாளாக கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் முடங்கி போய் உள்ளனர். இதனால் தெங்குமரஹாடா, அல்லி மாயார் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.