குழந்தைகள் கண்முன்னேயே பெற்றோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவர்கள் குளிப்பதற்கு முன்பு எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்துள்ள குழந்தை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜனார்த்தனன் - பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும், மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் சென்ற ஜனார்த்தனன், அங்கிருந்து மேலப்பாறை பகுதிக்கு சென்றுள்ளார்.
குழந்தைகள் இருவரையும் ஒரு பாறையில் அமர வைத்துவிட்டு மனைவியுடன் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார். அதற்கு முன்பாக தனது குழந்தைகளை நீர் குறைந்த அளவில் இருக்கும் பகுதியில் இறக்கி நீச்சல் அடிக்க விட்டு வீடியோவாக பதிவு செய்தார். அப்பொழுது அவரது குழந்தைகள் 'அப்பா நான் வீடியோவில் தெரிகிறேனா' என சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து குழந்தைகளை பாறை மேல் மேலே அமர வைத்துவிட்டு ஜனார்த்தனன், பவித்ரா ஆகிய இருவரும் ஆற்றில் இறங்கி குளித்த பொழுது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். இதனை கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் கதறி அழுதுள்ளனர். அவர்களது அழுகுரலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்க ஆற்றுக்குள் இறங்கினர். ஆனால் அதற்கு முன்பாகவே ஜனார்த்தனனும் அவரது மனைவி பவித்ராவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவர்கள் ஆற்றில் குளிப்பதற்கு முன்னால் எடுத்த அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.