தமிழகம் முழுவதும் உள்ள கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத உதவித்தொகை 10,000 வழங்க வேண்டும்; முடங்கிக் கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும்; அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று கிராம கோவில் பூசாரிகள் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதற்கு மாவட்டம் முழுவதும் இருந்து கிராம கோயில் பூசாரிகள் திரண்டு வந்து ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். இவர்களில் கிராம கோவில் பூசாரிகள், அருள்வாக்கு கூறுபவர்கள், பூக்கடை நடத்துகிறவர்கள் என ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள திரண்டு வந்திருந்தனர். திடீரென பூசாரிகள் கூடியிருந்த இடத்திற்கு வருகை தந்த கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் தலைமையில், போலீசார் பூசாரிகளிடம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. அனைவரும் கலைந்து செல்ல வேண்டும். மீறிப் போராட்டம் நடத்த முனைந்தால் அனைவரையும் கைது செய்வோம் என்று எச்சரிக்கை செய்ததோடு பூசாரிகளை கைது செய்து கொண்டு செல்வதற்காக வாகனங்களையும் கொண்டு வந்து நிறுத்தினர். இதற்காக ஏராளமான போலீசாரையும் கொண்டு வந்து குவித்தனர்.
போலீசாரின் எச்சரிக்கையையும், முன்னேற்பாடுகளையும் பார்த்த பூசாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் கலந்து பேசி பிறகு போராட்டத்தை கைவிட முடிவெடுத்தனர். அதோடு தங்களது கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி அங்கு வந்திருந்த பூசாரிகள் அனைவரிடமும் கோரிக்கை மனுக்களை பெற்ற நிர்வாகிகள் அந்த மனுக்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க அனுமதி பெற்றனர். அதன்படி பூசாரிகள் பேரவைத் தலைவர் பழனிவேலு, இணை அமைப்பாளர் பன்னீர், ஒன்றிய அமைப்பாளர்கள் மாயகிருஷ்ணன், மகாலிங்கம், பாண்டியன், திலீப் பக்கிரிசாமி ஆகியோர் கூட்டாகச் சென்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து மாவட்ட ஆட்சியர் மூலம் முதல்வருக்கு தங்களுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி கோரிக்கையை நிறைவேற்ற பரிந்துரை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் பூசாரிகள் பேரவை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி அனைத்து மனுக்களையும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். போராட்டம் நடத்த சுமார் 500க்கும் மேற்பட்ட கோவில் பூசாரிகள் கடலூருக்கு திரண்டு வந்திருந்தனர். ஆனால் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்குத் தடை விதித்த சம்பவம் பூசாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் கடலூர் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.