கரோனா நோய் மக்களுக்குப் பரவாமல் தடுத்து வைக்க அரசு மற்றும் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்து வருகிறது.அப்படியும் பொதுமக்கள் காய்கறி ,மளிகை பொருட்கள் வாங்கும் இடங்களில் இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டமாகச் சென்று முட்டி மோதிக்கொண்டு வாங்குகிறார்கள்.
காவல்துறை எப்படி கண்டித்தும் அதைக் கேட்பதில்லை.இதற்காக கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல்துறையினர் ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நகரில் நடத்தி வருகிறார்கள்.மக்கள் நடமாட்டம் உள்ள சாலைகளில் நாடகக் கலைஞர்களைக் கொண்டு எமதர்மன் வேடமிட்டும், காட்டேரி வேடமிட்டும் (இந்தக் காட்டேரிக்குப் பெயர் கரோனா காட்டேரி) விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இவர்கள் மூலம் தெருக்களில், மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அத்தியாவசியத் தேவைக்காக வெளியே வரும்போது முகக் கவசம் அணியவேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை நிறுத்த வேண்டும்.நாம் நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் கரோனா பரவாமல் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.இதுபோன்ற வாசகங்களைப் பேச்சு மற்றும் பாடல்கள் மூலம் மேளதாளத்துடன் பம்பை உடுக்கை வாசித்தபடி ஆடி பாடியபடி வருகிறார்கள்.
"இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை" இப்படிப்பட்ட பாடல்களை அவர்கள் பாடும் போது மக்கள் மிகவும் மனம் நெகிழ்ந்து கேட்கிறார்கள். எமதர்மன் வேடமிட்டவர் மோட்டார் பைக்கில் வலம் வந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இது மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.இதன்மூலம் அரசின்தடை உத்தரவை நாம் அனைவரும் மீறக் கூடாது.அந்தத் தடை உத்தரவு நம்மை நம் உயிரை பாதுகாக்கவே அரசு செய்துள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று மக்களிடம் மனமுருக பாடியும்,பேசியும் நடித்துக் காட்டி வருகிறார்கள் எமதர்மன், காட்டேரி வேடமிட்ட நாடகக் கலைஞர்கள்.இது ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரமாக மங்கலம்பேட்டை கடை வீதி மற்றும் மக்கள் வசிக்கும் தெருக்களில் நடைபெற்று வருகிறது.