cuddalore marine engineer build ship house for wife

Advertisment

கடலூர் OTஎன்று அழைக்கப்படும் ஓல்டு நகர் (முது நகர்) பகுதி மீனவர் சமூகத்தைச்சேர்ந்தவர் சுந்தரம். அவரது மகன் சுபாஷ். இவர் மரைன் இன்ஜினியரிங் பட்டப்படிப்புபடித்துள்ளார். இதன் மூலம் சரக்கு கப்பலில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.சில மாதம் கப்பல் பணிப்பயணம், சில மாதம் விடுமுறை என குடும்பத்தினருடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு சுருதி (வயது 11), கதிக்‌ஷா(வயது 8) என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

சுபாஷ் மனைவி சுபஸ்ரீ, தன்னையும்குழந்தைகளையும் சுபாஷ் பணி செய்யும் கப்பலில் ஒரு முறை பயணம் செய்ய அழைத்துச் செல்லுமாறு விருப்பத்தை தெரிவித்துள்ளார். சரக்கு கப்பலில் பயணம் செய்வது உங்களுக்கு ஒத்து வராது. அந்தக் கப்பல் கம்பெனியும் இதற்கு அனுமதிக்காது எனவே கப்பலை போன்ற ஒரு வீடு கட்டித் தருகிறேன் என்று கூறியுள்ளார் கணவர் சுபாஷ். இதனை விளையாட்டாக கூறுவதாக சுபஸ்ரீ அப்போது எண்ணி உள்ளார். ஆனால் சுபாஷ் மனைவியிடம் சொன்னதை செய்து காட்டியுள்ளார்.

தனது மனைவி பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற, கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் 11 ஆயிரம் சதுர அடி வீட்டுமனையை வாங்கிய சுபாஷ், அதில் 4000 சதுர அடியில் மனைவி பிள்ளைகள் கனவை நிறைவேற்றும் வகையில் 2022 ஆம் ஆண்டு கப்பல் போன்ற வடிவமைப்பில் ஒரு வீட்டைக் கட்டினார். கப்பலில் ஏறுவதைப் போன்று படிக்கட்டு அதில் ஏறிவீட்டுக்குள் செல்ல வேண்டும். கப்பலில் இருப்பதை போல் தரைதளம். அதன்மேல் இரண்டாம் தளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆறு அறைகள். அதில் உடற்பயிற்சி செய்யும் அறை, நீச்சல் குளம் ஆகியவற்றையும் அந்த வீட்டுக்குள் அமைத்துள்ளார்.

Advertisment

கப்பலின்அமைப்பு எப்படி இருக்குமோ அதே போன்று உள்ளேயும் வெளியேயும் அமைக்கப்பட்டுள்ளது. மிக அருமையான வடிவமைப்பில் இந்த கப்பல் வீடு கட்டப்பட்டுள்ளது. தண்ணீரில் மிதக்கும் கப்பலை போல இந்த வீடும் தண்ணீரில் மிதப்பது போல் வண்ண விளக்கு அலங்காரத்துடன் இரவு நேரங்களில் தோற்றமளிக்கிறது. அதற்கான வண்ணம் பூசப்பட்டுள்ளது. பார்ப்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விழிகளை விரியவைக்கிறது.தண்ணீரில் மிதந்து செல்லும் கப்பல் தரையில் மிதந்து வருவது போல் வடிவமைத்துள்ளார் சுபாஷ்.

cuddalore marine engineer build ship house for wife

இந்த பிரமாண்ட கப்பல் வீட்டுக்கு கடந்த இரண்டாம் தேதி புதுமனை புகுவிழா நடத்தி குடியேறி உள்ளனர் சுபாஷ் குடும்பத்தினர். இந்த கப்பல் வீடு புதுமையான வகையில் கட்டப்பட்டுள்ளது பற்றிய தகவல் பரவி பொதுமக்கள் இந்த வீட்டைப் பார்ப்பதற்கு படையெடுத்து வருகிறார்கள். காதல் மனைவி மும்தாஜ்காக ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார். அதேபோல் தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற கப்பல் வீடு கட்டி உள்ள சுபாஷிற்கு பலரும் வாழ்த்துக்களைத்தெரிவித்து வருகிறார்கள்.