Skip to main content

போதைப்பொருள் கடத்தல்; சாதுரியமாகச் செயல்பட்ட போலீசார் 

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

cuddalore district panruti car incident action taken by police 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் நேற்று சென்னை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போலீசார் அருகில் வந்து நிறுத்துவது போன்று காரின் வேகத்தை குறைத்து உடனடியாக காரை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த காரை தொடர்ந்து சென்று போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.

 

அப்போது அந்த காரில் உள்ள ரகசிய இடத்திலிருந்த கேசில் 16 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த இரண்டு பேரை பிடித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாதவன் (வயது 22) மற்றும் திருச்சியில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த நதிஷ்குமார் (வயது 31) ஆகியோர் என்பதும், கஞ்சா கடத்த திருச்சி நகரில் காரை புக்கிங் செய்து சென்னைக்கு சென்று பூந்தமல்லி பகுதியிலிருந்து 16 கிலோ கஞ்சாவை வாங்கி கும்பகோணம் பகுதியில் உள்ள ஒருவரிடம் விற்கச் சென்றதும் தெரியவந்தது.

 

அதனைத் தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த பண்ருட்டி போலீசார், கஞ்சா பொட்டலங்களையும் காரையும் பறிமுதல் செய்ததுடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடுதி - திருமண மண்டபங்களில் போலீசார் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Hostel - Police intensive search in marriage halls

பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மட்டும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர். விடுதியில் தங்கி இருந்தவர்கள் விபரங்களைச் சேகரித்தனர்.

இதேபோல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதி இன்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.