கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லல்பேட்டை என்ற ஊருக்கு சென்னையில் இருந்து இன்னோவா கார் மூலம் இருவர் சனிக்கிழமை இரவு வந்துள்ளனர். கார் அதிகாலை வீராணம் ஏரியின் கரைகளில் வந்தபோது தெற்கு விருதாகநல்லூர் என்ற இடத்தில் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் வீராணம் ஏரியில் காரை இறக்கிவிட்டார். கார் ஏரியின் தண்ணீரில் முழ்கியது. இதனை தொடர்ந்து உள்ளூர் நண்பர்கள் உதவியுடன் கிரேன் வண்டியை வரவழைத்து காரை தூக்கியுள்ளனர். இதனால் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை.
வீராணம் ஏரி கரையின் தடுப்பு சுவரும், சாலையின் அளவும் ஒரே அளவாக உள்ளது. இதனால் இந்த ஏரிக்கரை சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஏரியின் தடுப்பு சுவரை உயர்த்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனை பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன் ஏரியின் தடுப்பு சுவரை உயர்த்தவேண்டும் என்று அப்பகுதியிலுள்ள மக்கள் மற்றும் வகான ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.