Skip to main content

"அவசியம் முகக் கவசம் அணிய வேண்டும்" - கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி பேட்டி!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

cuddalore district coronavirus prevention special officer pressmeet

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை, மாவட்ட கரோனா தடுப்பு சிறப்புக் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், விருத்தாசலம் நகரத்தில் உள்ள கடைகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, முகக்கவசம் அணிய வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி, "தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது முகக்கவசம் இல்லாமல் செல்லக்கூடாது. சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட ஆட்சியருடன், அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறோம்.

 

cuddalore district coronavirus prevention special officer pressmeet

 

பெரும்பாலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொண்டுதான் செல்கிறார்கள். இருப்பினும் சிலர் முகக்கவசம் இல்லாமல் இருக்கிறார்கள். மேலும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும், அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான சிறப்பான ஏற்பாடுகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்று மட்டும் கிட்டத்தட்ட 130 பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுள்ளனர். இன்னும் அதிகமான பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்.

 

தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஒரு பெரிய அளவில் பாதுகாப்பு கிடைக்கும். தடுப்பூசியின் இருப்பு அளவு அதிகரிக்கும்போது 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் போடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். ஜுரம், தலைவலி, சளி, இருமல் உள்ளிட்ட உபாதைகள் இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தானாக சரியாகிவிடும் என எண்ணிக் கொண்டு வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. மேலும், தாமதம் ஏற்பட்டால் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரை விடக் கூடிய சூழ்நிலை ஏற்படும். அதனால், சந்தேகமாக இருப்பின் சோதனை செய்து கொண்டால், மறு நாளிலே முடிவு தெரிந்துவிடும். அதற்கு ஏற்றார்போல் சிகிச்சை பெற்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருப்பதினால் தன்னை மட்டுமல்லாமல் தன்னுடன் இருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் காப்பாற்ற முடியும்" இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் மையம்” - ககன்தீப் சிங் பேடி 

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Artificial Insemination Center at Government Medical College Hospital  says Gagandeep Singh Bedi

 

வேலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்தார் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் சுகன்தீப் சிங் பேடி. வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனையில் அவசரகால விபத்து சிகிச்சை பிரிவு, காய்ச்சல் பிரிவு, பொது சிகிச்சை பிரிவு மையம், சலவைக் கூடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், வேலூர் அரசுக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் மையம் அமைப்பதற்கான ஆலோசனையில் அரசு ஈடுபட்டு நடைபெற்று வருகிறது. மேலும் தனியார் செயற்கை கருவூட்டல் மையங்களில் அரசின் விதிமுறைப்படி செயல்படாத மையங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தவறு செய்யும் மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீக்காயத்துடன் வந்த சிறுமிக்கு அங்குள்ள மருத்துவமனை பாதுகாவலர்கள் சிகிச்சை அளித்தது தொடர்பாக புகார் குறித்து மாவட்ட ஆட்சியரின் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லை எனத் தெரிய வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

பொதுவாக தமிழ்நாட்டில் கடந்த காலங்களை காட்டிலும் தற்போது இந்த ஆண்டு தீக்காயங்கள் பாதிப்பு குறைந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதால் இந்த தீக்காயங்களின் அளவு குறைந்து இருப்பதாகவும், இது மேலும் குறைவு எனவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சை பிரிவு மையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் சுத்தமான தண்ணீர் தேங்குவதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகிறது. அதனால் பொதுமக்கள் சுத்தமான தண்ணீரை தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த ஆண்டு சுமார் 6000 பேர் டெங்கு காய்ச்சினால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாக்கப்பட்டிருப்பதாகவும், டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாகத் தமிழ்நாடு முழுவதும் சனி - ஞாயிறு கிழமைகளில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதால் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கூறினார்.

 

 

Next Story

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

What are the symptoms of dengue fever?

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பகல் நேரங்களில் கடிக்கக்கூடிய ஏ.டி.எஸ். எஜிப்டி வகையான கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவும். இந்தக் காய்ச்சலால் உயிர் பிரியும் ஆபத்தும் உள்ளது. புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் கல்லூரி மாணவி ஒருவரும், இளம்பெண் ஒருவரும் பலியாகினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டையில் இன்று பலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு உறுதியாகி அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவியதற்கான அறிகுறிகளை எளிய முறையில் கண்டறிந்து அதை ஆரம்ப நிலையில் இருக்கும்போதே நம்மால் தற்காத்துக் கொள்ள முடியும். இதற்கான அறிகுறிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். அதன் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தீவிர அறிகுறிகள்.

 

இதில் டெங்கு நோய்த் தொற்றின் முதன்மை அறிகுறிகளில் காய்ச்சல் ஒன்றாகும். இது பொதுவாகத் திடீரென்று தோன்றும் மற்றும் பல நாள்களுக்கு நீடிக்கலாம். இதில் ஆரம்ப அறிகுறியானது, உடல் சோர்வு அதிகமாகக் காணப்படும். மேலும், படுக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு உடல் வலி இருக்கும். தலைவலி கூடுதலாக இருக்கும். கண்களில் அதிக வலி இருக்கும். அத்துடன் கால்கள் மற்றும் உடல் வலி அதிகமாக இருக்கும். இவையெல்லாம் ஆரம்ப அறிகுறிகளாகும். 

 

அதே தீவிர அறிகுறி என்றால், பல் ஈறுகளில் ரத்தப்போக்கு ஏற்படும். அதிக அளவுக்கு உடல் அசதி மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலமாக இருந்தால் உதிரப்போக்கு அதிகரிக்கும். மலம், சிறுநீரில் ரத்தம் வெளியேறும். தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இது மாதிரியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.  இந்த காய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள ரத்த அணுக்களை அதிகரிக்கக் கூடிய நிலவேம்பு கசாயத்தை அருந்தலாம். 

 

மேலும், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களைத் தடுப்பதற்கு நமது வீட்டில் உள்ள தேவையற்ற நீர் தேங்கும் தொட்டி அல்லது பாத்திரங்களை அகற்றிவிட வேண்டும். ஏனென்றால், நீர் தேங்கும் இடத்தில் கொசு தனது இனப்பெருக்கத்தை அதிகரித்து டெங்கு காய்ச்சலை உண்டாக்கும். மேலும், வீட்டில் உள்ள தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்களைக் கொசு அண்டாத அளவுக்கு மூடி வைக்க வேண்டும். ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீரை அடிக்கடி வெளியேற்ற வேண்டும். இது மாதிரி ஆரம்பக் கட்டத்திலேயே கொசுக்கள் பரவாமல் பல வழிமுறைகளைச் செய்தால் டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.