கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையம் அருகில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவரை போலீசார் வழிமறித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் போலீசாரை மிரட்டி விட்டு அங்கிருந்து வேகமாக இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அவர்களைப் பிடிப்பதற்கு போலீசார் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். வேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த இரு இளைஞர்களும் சேத்தியாத்தோப்பு நான்கு ரோடு அருகே உள்ள பாலத்தின் தடுப்புக் கட்டையில் மோதி கீழே விழுந்தனர். இதில் லேசான காயத்துடன் இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்த போது சந்தேகப்படும்படி முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பதில் அளித்துள்ளனர்.
இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் மதுவானைமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர்களான அருண் ஸ்டாலின் மற்றும் முருகன் என்பது தெரியவந்தது. அவர்கள் போலீசாரிடம் தெரிவிக்கையில், தங்கள் ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் விவசாய பம்பு செட்டு மோட்டாரை திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது போலீசார் வழிமறித்ததாகவும், போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் விரைந்து சென்ற போது மீண்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்தின் போது காயமடைந்த முருகனை சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், அருண் ஸ்டாலினை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையிலும் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.