தமிழக ஆளுநரை கண்டித்து சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சீர்காழி சட்டநாதர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு இன்று (23.05.2023) சாலை மார்க்கமாக கடலூர் வழியாகச் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கி செல்வதற்காக வருகை தந்தார். இதனையறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் பி. துரை தலைமையில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வி. எம். சேகர், மாவட்ட துணைச் செயலாளர் கோபு, வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் தமிழக ஆளுநர் வருகையின்போது, நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சட்ட விரோதமாக குழந்தை திருமணம் செய்வதை நியாயப்படுத்தி பேசும் ஆளுநரை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆளுநரை கண்டித்து, 'சனாதனவாதியாக செயல்படும் ஆளுநரே' என கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கருப்புக் கொடி போராட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் குவிக்கப்பட்டு இருந்தனர்.