![Cuddalore](http://image.nakkheeran.in/cdn/farfuture/l_IU2fCt5lqu6MGRxmqRa_tTytptsuAoCOy1Pp2ZVPM/1533347624/sites/default/files/inline-images/Cuddalore%20600.jpg)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 10.4.2018 அன்று இரவு கர்நாடக அரசு பேருந்து கடலூரில் மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது. இதுகுறித்து கர்நாடக மாநில் பெல்காம் மாவட்டம், அறிமந்திராவை சேர்ந்த பசவராஜ் என்பவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதனடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன், சாமி ரவி, கோண்டூர் ராஜா, சாமியார்பேட்டை தனசேகர், கடலூர் 0T நாராயணன், அழகியநத்தம் சுரேஷ், பச்சையாங்குப்பம் நாராயணசாமி ஆகியோர் சட்ட விரோதமாக ஒன்று கூடி பஸ்ஸை வழிமறித்து, அசிங்கமாக திட்டியும், பஸ் கண்ணாடியை உடைத்தும், பொது சொத்தை சேதபடுத்தியும், கொலை மிரட்டல் விடுத்ததாக கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் சரவணன் விசாரணை மேற்கொண்டு கைது செய்து, அதன்பின் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கடல்தீபன் பொது சொத்தை சேதப்படுத்தியதாகவும், பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் கூறி கடலூர் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி கடல்தீபனை குண்டர் தடுப்பு காவலில் சிறையில் வைக்க ஆணையிட்டதின் பேரில் ஒராண்டு மத்திய சிறையில் வைக்கப்பட்டார்.
மேலும் அரசு மற்றும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துவோர் மீது குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்படுவர் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டு உரிமைக்காக போராடியர்களை குண்டர் எனக்கூறி தடுப்பு காவலில் சிறைப்படுத்துவதென்பது தமிழ்நாட்டு உரிமைக்காக போராடுபவர்களை மிரட்டுவது போன்றது என்றும், பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்காக அதற்குரிய சட்ட பிரிவுகளில் கைது செய்து வழக்கு விசாரணை நடைபெறும்போது தடுப்புக்காவலில் சிறைப்படுத்துவது தமிழர் உரிமைக்காக போராடுபவர்களை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசின் சர்வாதிகார போக்கையே பிரதிபலிக்கிறது என தமிழார்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.