கடலூர் மக்களவை தொகுதிக்கு அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகின்றது. பாமகவின் வேட்பாளர் கோவிந்தசாமி கடலூர் நகரத்தில் பகுதியில் செவ்வாயன்று (மார்ச் 26) பிரச்சாரத்தை துவக்கினார். அவருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அக்கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது கடலூர் நகராட்சியின் அவலநிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா? நகராட்சியில் எந்த வேலையும் நடைபெறவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா? என ஒரு பெண் கேள்விக்கணைகளைத் தொடுக்க இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் வேட்பாளர் கோவிந்தசாமி அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து பக்கத்து வீட்டிற்கு சென்றனர். இந்நிகழ்வைப் பார்த்த படை பட்டாளங்கள் கேள்வி கேட்ட பெண்மணியை சகட்டு மேனிக்கு திட்டித்தீர்த்தனர். பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பழ.தாமரைக் கண்ணன் அப்பெண்மணியிடம் முதன் முதலில் வாக்கு கேட்டு உங்கள் இல்லம் தேடி வந்தவர்களிடம் இப்படியா பேசுவது நீங்கள் என்ன லண்டனிலிருந்து வந்திருக்கிறாய என கடிந்து கொண்டார்.
அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் இடங்களில் பொதுமக்கள் தங்களை கேள்வி கேட்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மிரட்டி வரும் சம்பவம் கடலூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தேர்தல் முடிவு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வேட்பாளர் மற்றும் அவரது கட்சியினர் உள்ளனர்.