Skip to main content

சி.எஸ்.சிலை திறப்பு... பெருமையில் ஈரோடு...!

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

CS statue unveiled ... proudly Erode ...!

 

பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படுவர் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரான மறைந்த சி.சுப்பிரமணியம். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்ற தேசிய தலைவர்கள், தி.மு.க. தலைவர்களான அண்ணா, கலைஞர் என பல்வேறு தலைவர்களால் நட்பு பாராட்டைப் பெற்றவர். இந்திய அரசியலில் தமிழகத்தின் ஆளுமைமிக்க நிர்வாகியாக செயல்பட்டவர். ஈரோட்டை பூர்வீகமாக கொண்ட சி.சுப்பிரமணியத்திற்குச் சிறப்பு செய்யும் வகையில், ஈரோடு திண்டல் என்ற பகுதியில் உள்ள வேளாளர் கல்லூரியில் அவரின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டது.

 

அச்சிலையின்  திறப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. இவ்விழாவில் வரவேற்புரை ஆற்றிய சக்தி மசாலா நிறுவனத் தலைவர் பி.சி. துரைசாமி, "நம் நாட்டில் அன்று இருந்த 40 கோடி மக்களுக்கும், இன்றுள்ள 140 கோடி மக்களுக்கும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறத் தொலைநோக்கு பார்வையுடன் பசுமைப் புரட்சி திட்டம் கொண்டு வந்தவர் சி.சுப்பிரமணியம்''என்றார்.

 

விழாவுக்கு தலைமை வகித்த தேசிய விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன், "நாடு முழுவதும் படிப்படியாக இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்பதில் ஜவர்கலால்நேரு உறுதியாக இருந்தபோது, தமிழகத்தில் திராவிட இயங்கள்கள் மிக கடுமையாக எதிர்த்து போராடியது. அப்படிப்பட்ட இந்தி திணிப்பால் தென் மாநிலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேருவுக்கு சி.எஸ். தெளிவாக எடுத்துக் கூறினார். கட்டாய இந்தி திணிப்புக்கு எதிரான வலுவான போராட்டமும் சி.எஸ்ஸின் ஆலோசனையின் காரணமாகவே இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை, அங்கு, ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என்ற முடிவை நேரு எடுத்தார்" என்றார்.

 

காணொலிக் காட்சி மூலம் சி.சுப்பிரமணியம் சிலையைத் திறந்து வைத்து, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பேசும்போது,  "கிராமராஜ்யம் வேண்டும் என்ற காந்தியக் கொள்கையை ஏற்றவர் சி.எஸ். அதனைச் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், கிராம ஆட்சி, கிராம மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் சி.எஸ். கொள்கையை நிறைவேற்ற முடியும்" என்றார்.

 

 

CS statue unveiled ... proudly Erode ...!

 

விழாவில், சி.சுப்பிரமணியத்தின் வழித்தோன்றல்களை கவுரவித்து, பாரதிய வித்யா பவன் தலைவர், பி.கே கிருஷ்ணராஜ் வானவராயர் பேசும்போது, "நேர்மை, எளிமை, திறமை என மூன்றையும் ஒருங்கே கொண்டவர் சி.எஸ். தமிழ் வழிக்கல்வியில், நகராட்சி பள்ளியில் படித்து நாட்டின் நிதியமைச்சர் உள்ளிட்ட பதவிகளைப் பெற்றதோடு, பாரத ரத்னா விருது பெற்றவர். சிறந்த நிர்வாகிகளை உருவாக்கும் திறன் கொண்டவராக வாழ்ந்தார். நூறு ஆண்டுகளுக்குப் பின் இந்தியா எப்படி இருக்க வேண்டும் எனக் கனவு கண்டதோடு, அதனை நனவாக்க செயல்திட்டங்களை சி.சுப்பிரமணியம் உருவாக்கினார். எந்த துறையில் நிர்வாகம் செய்தாலும், அதில் ஒரு முத்திரையை சி.எஸ்.பதித்துள்ளார். தமிழர்கள் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அடையாளமாக சி.எஸ்.வாழ்ந்தார். பரம்பிக்குளம் ஆளியாறு திட்டம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி, பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகிய மூவருக்கும் தமிழக அரசின் சார்பில் பொள்ளாச்சியில் சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அது நமக்கு பெருமைக்குரியது. சி.எஸ்ஸின் பசுமைப்புரட்சி சாதனைக்காக நோபல் பரிசு வழங்க அந்த குழுவினர் முன்வந்தபோது, அதனை மறுத்து, விஞ்ஞானிகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.. அப்துல் கலாம், வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட குரியன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களை பொருத்தமான இடங்களில் அமரவைத்து மாற்றத்தை ஏற்படுத்தியவர்.  

 

அவர் வாழ்ந்த 90 ஆண்டுகளில் ஒரு நாள் கூட தனக்காகவோ, தன் குடும்பத்திற்காகவோ வாழ்ந்ததில்லை. சமுதாய நலனுக்காக மட்டுமே வாழ்ந்தார். இப்போதெல்லாம் நாம் சுயநலத்திற்காக எல்லாவற்றிலும் சமரசம் செய்ய தயாராகி விட்டோம். ஆனால், சி.எஸ். தன் வாழ்வில் தனக்காக எதிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. மாற்றத்திற்கு ஏற்ப மாற வேண்டும். ஆனால், எதில் மாறக்கூடாதோ அதில் பிடிவாதமாக இருக்க வேண்டும் என அந்த தலைமுறையினர் உணர்ந்து இருந்தனர். அடுத்த தேர்தல் பற்றிச் சிந்திக்காமல், அடுத்த தலைமுறை பற்றிச் சிந்தித்தனர்.

 

இன்றைய பள்ளி, கல்லூரிகளில் உண்மையான கல்வி கற்பிக்கப்படவில்லை. பணிவும், பக்குவமும் கொடுக்கும் கல்வியே தேவை. தற்போதைய வாழ்க்கைமுறை மிக அபாயகரமானதாக உள்ளது. இன்று சி.எஸ். போன்ற நேர்மையாளர்கள் தேவையாய் உள்ளார்கள். இப்போது எல்லாம் கெட்டுவிட்டது, நாம் எதுவும் செய்ய முடியாது என்று கருதாமல், நம்முள் மாற்றத்தை ஏற்படுத்தினால், சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மகாத்மாவின் வழியில் இளம் சமுதாயம் சென்றால், இந்தியாவிற்கு மகத்தான எதிர்காலம் உள்ளது." என்றார்.

 

 

ஸ்டாலின் குணசேகரன், பாரதி வித்யா பவன் தலைவர் அருணா ராமகிருஷ்ணன், வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர், சக்தி மசாலா இயக்குநர் சாந்தி துரைசாமி, தி.மு.க. துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தமாகா யுவராஜ், விடியல் சேகர் உள்ளிட்டோரும் இவ்விழாவில் பங்கேற்றார்கள். 

 

சார்ந்த செய்திகள்