Skip to main content

இது மாநில அதிகாரம்! - சி.ஆர்.பி.எஃப் வீரர்களை வெளியனுப்பிய தமிழ்நாடு போலீஸ்! 

Published on 02/12/2023 | Edited on 05/12/2023
CRPF police not allowed in Madurai enforcement directorate office

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்ட சம்பவமும், அவரிடத்தில் இருந்து லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால், மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

CRPF police not allowed in Madurai enforcement directorate office

முதலில் சுரேஷ்பாபு தர மறுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து திவாரி தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக 51 லட்சம் ரூபாய் கண்டிப்பாக தரவேண்டும் என மிரட்டி உள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி திவாரி. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாய் முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையை கேட்டுள்ளார் அங்கித் திவாரி.

மீண்டும் மருத்துவர் சுரேஷ் பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் துணையோடு ரசாயனம் தடவிய 20 லட்சம் ரூபாயை பேக்கில் வைத்து இன்று காலை திண்டுக்கல் - மதுரை சாலையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு கொடுக்கும்பொழுது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரி திவாரி பிடிபட்டார்.

CRPF police not allowed in Madurai enforcement directorate office

லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. சரவணன் தலைமையில் கடந்த 12 மணி நேரமாக திண்டுக்கல் இ.பி காலனியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து திவாரியிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில், முடிந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதாக பிரதமர் அலுவலக பெயரை பயன்படுத்தி, மருத்துவரை மிரட்டி, அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் கேட்டது தெரியவந்துள்ளது. பின்னர் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீட்டில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனால், அங்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், எஸ்.பி ரேங்கில் உள்ள அதிகாரிகள் வந்தால்தான் சோதனைக்கு அனுமதிக்க முடியும் என அமலாக்கத்துறை தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இந்த விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய முக்கிய அதிகாரியான அங்கித் திவாரி அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதில் மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் லஞ்ச பணமானது பிரித்து கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், இதேபோல் பலரிடம் மிரட்டி லஞ்சம் பெற்று அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக்கொடுத்ததும் தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம், 15 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்திய திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணையை முடித்து திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

CRPF police not allowed in Madurai enforcement directorate office

 

அதேசமயம், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு துவங்கிய லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை இன்று (2ம் தேதி) காலை 7 மணி அளவில் நிறைவடைந்துள்ளது. 

மதுரை அமலாக்கத்துறையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டபோது நேற்று இரவு முதலில் எல்லை பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். பிறகு நள்ளிரவு சமயத்தில் துணை ராணுவப் படையினர் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்களை தமிழ்நாடு காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். அனுமதி மறுத்தது குறித்து துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு போலீஸாரிடம் கேட்டபோது, முறையான அனுமதி பெற்று பிறகு உள்ளே வாருங்கள் என வெளியே நிறுத்தி வைத்தனர். மேலும், அலுவலகம் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும், தற்போது வழக்கு தமிழ்நாடு மாநில லஞ்ச ஒழிப்புத்துறையில் பதிவாகியுள்ளது. அதனால் தற்போது மாநில அரசின் முறையான அனுமதியின்றி உள்ளே அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அங்கு மேலும் பரபரப்பான சூழல் நிலவியது. 

அதேபோல், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டதும், அங்கித் திவாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தன் மேலதிகாரிகளுக்கு இந்த லஞ்ச பணத்தை பகிர்ந்ததாகவும் ஒரு தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சோதனைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த சமயம், நேற்று இரவு திடீரென சாஸ்திரி பவன் மூடி பூட்டு போடப்பட்டது. இது மேலும், தமிழ்நாடு அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த 13 மணி நேரமாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த சோதனை முடிவுபெற்றுள்ளது. இந்தச் சோதனையில், அங்கித் திவாரி அறை மட்டுமின்றி அலுவலகம் முழுவதுமே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கித் திவாரி அறையில் இருந்து சில ஆவணங்களையும், அரசு மருத்துவர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைப்பற்றி அதனை எடுத்துச் சென்றுள்ளனர். 

சார்ந்த செய்திகள்