சேலத்தில் ரெம்டெசிவர் மருந்து வாங்க பல மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. இதனால் புதிதாக பலருக்கு நோய்த்தொற்று உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. தமிழகத்தில் கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேர் இந்நோய்த் தொற்றுக்கு புதிதாக இலக்காகி வருகின்றனர். அதேநேரம் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளது.
சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில், மே 8ம் தேதி முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய (மே 10) தினம் ஒரே நாளில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் மருத்துவக்கல்லூரியில் குவிந்தனர். சேலம் மட்டுமின்றி தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் மருந்து வாங்க மக்கள் வந்திருந்தனர்.
விற்பனை துவக்கப்பட்ட நாளன்று தினமும் 200 பேருக்கு மருந்து விற்பனை செய்யப்படும் எனவும், 6 குப்பிகள் கொண்ட ஒரு பேக்கேஜ் 9500 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டது.
மருந்து வாங்க வருவோர், நோயாளியின் ஆர்டிபிசிஆர் மருத்துவ பரிசோதனை அறிக்கை, மருத்துவரின் மருந்து பரிந்துரை சீட்டு, நோயாளி மற்றும் மருந்து வாங்க வருவோரின் ஆதார் எண் ஆகியவற்றின் நகல்கள் கொண்டு செல்ல வேண்டும்.
மருந்து விற்பனை தொடங்கிய முதல் நாளில் 75 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மறுநாள், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டது.
மீண்டும் திங்கள் கிழமையன்று (மே 10) வெறும் 50 பேருக்கு மட்டுமே மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. 6 குப்பிகள் மருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதிலும் பாதியாக குறைத்து 3 குப்பிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
திங்களன்று அதிகாலை 4.30 மணிக்கு மருந்து வாங்க வரிசையில் நின்ற பெண் ஒருவர், அன்று மாலை 6 மணிக்குதான் வீடு திரும்பியுள்ளார். அப்போதும் அவருக்கு மருந்து கிடைக்கவில்லை.
அந்தப் பெண்ணுக்கு வரும் 14ம் தேதி மருந்து கிடைக்கும் என்று கூறி, டோக்கன் வழங்கியுள்ளனர். இப்போதைய மருந்து கையிருப்பின் அடிப்படையில் ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
மற்றொரு பெண், Ôகணவன் உயிருக்குப் போராடி வருகிறார். ரெம்டெசிவர் மருந்து உடனடியாக கொடுக்காவிட்டால் இங்கேயே கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன்,Õ என்று மிரட்டல் விடுத்தார். காவல்துறையினர் அவரை ஆசுவாசப்படுத்தினர். ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு மருந்து கிடைக்கவில்லை.
உணவு சாப்பிட வெளியே சென்றால் மீண்டும் வரிசையில் இருந்து பின்தங்கி விடுவோமோ என்ற அச்சத்தில் வயதானவர்கள் பலர், ஒரு நாள் முழுவதும் உணவின்றி, வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு கால்கடுக்க வெயிலில் நின்றனர். சிலர் மயக்கமுற்றனர்.
இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், சமூக இடைவெளி இல்லாமல் கூட்ட நெரிசலில் பலர் சிக்கி மயக்கமுற்றதும் நடந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் கொரோனோவுக்கு மருந்து வாங்க சென்ற பலர் நோய்த்தொற்றுக்கு இலக்காகும் அபாயமும் உள்ளது.
என்னதான் காவல்துறையினர் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றாலும், கட்டுக்கடங்காத கூட்டம் என்பதால் ஒருகட்டத்திற்கு மேல் காவல்துறையினரும் செய்வதறியாது விழிபிதுங்கி நின்றனர்.
அனைவருக்கும் ரெமடெசிவர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களில் ரெம்டெசிவர் மருந்து விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.