கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பிரதான கோயில்களில் ஆடி கிருத்திகை தரிசனம், ஆடிப்பெருக்கு உள்ளிட்ட விஷேச நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் இன்று (01/08/2021) முதல் ஆகஸ்ட் 3- ஆம் தேதி வரை கோயில்களில் சென்று நேரடியாக தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்திப் பெற்ற ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல், சமயபுரம் உள்பட 5 கோயில்களிலும், உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகா் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும், பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிா்சோலை முருகன் கோயில்களிலும் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. இருப்பினும் அந்தந்த நாட்களில் நடைபெறும் பூஜைகள் வழக்கம் போல் பக்தர்களின்றி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி காவிரி கரையோரப் பகுதிகளில் பக்தா்கள் ஆடி18 முன்னிட்டு புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.