கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பணியில் இருந்த 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிராமத்தில் கனகராஜ் அவரது மனைவி காந்திமதி பெயரில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு அதிக அளவில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இப்பணியில் அதே கிராமத்தை சேர்ந்த 9 பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் கனகராஜ் மனைவி காந்திமதி உட்பட மலர்கொடி, ராஜாத்தி, லதா, சித்ரா, ருக்மணி, அனிதா, தேன்மொழி ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகியும், உடல் உறுப்புகள் துண்டித்த நிலையிலும் தூக்கி வீசப்பட்டு பலியாகியுள்ளனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர சகாமுரி, காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், வருவாய்துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
தகவல் அறிந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி மீட்பு பணிக்கு உதவி வருகிறார்கள். ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பெண்கள் வெடிவிபத்தில் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.