கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் திருவாமூர் ஊராட்சி, காமாட்சி பேட்டை கிராமம் இங்கு 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 83 நபர்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 4 பேர் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் சில தனி நபர்கள், அந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. புதுப்பேட்டை காவல்துறையினரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், தனிநபருக்கு துணைபோகும் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஎம் பண்ருட்டி வட்டச் செயலாளர் எஸ்.கே. ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி. உதயகுமார், வி. சுப்பராயன், மாவட்டக் குழு உறுப்பினர் டி. கிருஷ்ணன், பண்ருட்டி நகரச் செயலாளர் உத்தராபதி, நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் எம். ஜெயபாண்டியன், வட்டக் குழு உறுப்பினர்கள் லோகநாதன், பன்னீர், முருகன், பூர்வ சந்திரன், வினோத்குமார், தமிழ்ச்செல்வன், தேவநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.