Skip to main content

சிபிஎம்- ல் இருந்து மாஜி பெண் எம்.எல்.ஏ  நீக்கம்!

Published on 22/01/2019 | Edited on 22/01/2019
c

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனி தொகுதி எம்.எல்.ஏவாக திமுக கூட்டணியில் வெற்றிபெற்று 2006 முதல் 2011 வரை இருந்தவர் சி.பி.எம் கட்சியை சேர்ந்த லதா. சி.பி.எம் கட்சியின் முழு நேர ஊழியராகவும், வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் கடந்த 10 ஆண்டுகளாக இருந்துவந்தார். இந்நிலையில், ஜனவரி 21ந்தேதி கூடிய வேலூர் மாவட்டக்குழு கூட்டத்தில், கட்சியின் விதிகள், கட்டுப்பாடுகளை மீறியதால், முன்னால் எம்.எல்.ஏ லதா கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என அறிவித்துள்ளனர்.

 


இதுப்பற்றி வேலூர் மாவட்ட செயலாளர் தயாநிதியிடம் கேட்டபோது, கடந்த ஓராண்டாக கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்துக்கொள்ளவில்லை. அவர் கட்சியின் முழு நேர ஊழியர் என்பதால் முன்னால் எம்.எல்.ஏவுக்கான ஊதியத்தை கட்சிக்கு அவர் வழங்க வேண்டும் அதையும் அவர் கடந்த 15 மாதங்களாக வழங்கவில்லை. இதுப்பற்றி 6 முறை கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் தரவில்லை, விளக்கமும் தரவில்லை. இதனால் கடந்த டிசம்பர் மாதம் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

 


ஏன் அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்தார் என கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, லதாவின் கணவர் மணி. தொடக்கப்பள்ளி ஆசிரியராகவுள்ளார். கட்சி ஆதரவு பெற்ற அரசு ஊழியர் அமைப்பில் நிர்வாகியாக இருந்தார். அவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என ஓழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். அவரை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கட்சி நிர்வாக குழுவில் லதா முறையிட்டு வந்தார். அவரை மீண்டும் இணைப்பதில் சில சிக்கல்கள் இருந்ததால் அவரை இணைக்காமல் வைத்திருந்தனர். இதனால் அவர் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்தார், இதனால் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள்.

 


நாம் தகவல் பெற லதாவை தொடர்பு கொண்டபோது அவரது எண் சுச் ஆப் நிலையில் இருந்தது. அவரது ஆதரவாளர்கள் நம்மிடம், 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதலில் ஒரு தரப்புக்கு அதிகாரம் கைக்கு வந்ததும் லதாவை பழிவாங்கிவிட்டார்கள். மணியை கட்சியை விட்டு நீக்கியபின், சில ஆண்டுகள் கழித்து அவரை கட்சியில் இணையுங்கள் என மாவட்ட கமிட்டியில் வேண்டுக்கோள் வைத்தார். அதை மாவட்ட கமிட்டி பரிசீலிக்கவில்லை. இல்லையென்றால் என்னை கட்சியை விட்டு நீக்கிவிடுங்கள் என்றார், தற்போது கட்சியை விட்டு நீக்கியுள்ளார்கள் என்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்