சென்னை மாநகராட்சி புளியந்தோப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சையின்றி கர்ப்பிணி ஜனகவள்ளி (வயது 28) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உயிரிழந்தார். சேப்பாக்கம் மசூதி தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளி கனகராஜ் (வயது 37) மின்சாரம் தாக்கி கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று உயிரிழந்தார்.

Advertisment

இது தொடர்பாக அப்போதைய மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியிடம் இரண்டு முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சியின் மெத்தனத்தை கண்டித்து மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று (18.05.2023) மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

அப்போது பேசிய கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, "மாநகராட்சி அதிகாரிகள் கடமையைச் செய்யாததால் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துகிறது. உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். மாநகராட்சியில் நடைபெறும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் தர வேண்டும்" என்றுஅவர் வலியுறுத்தினார்.