திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திருப்பஞ்சலி பகுதியில் வசித்து வருபவர் விவசாயியான சேகர். இவர், வழக்கம் போல் திருப்பஞ்சலி பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடு மாடுகளுக்கு தண்ணீர் காட்ட வனத்தாயி அம்மன் கோவில் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு கோவிலுக்கு அருகே அமைந்திருந்த 70 அடி ஆழமுள்ள கிணற்றில் அவரது பசுமாடு ஒன்று தவறி விழுந்துள்ளது.
உடனே அக்கம்பக்கத்தினரை அழைத்த சேகர், பசுமாட்டை மீட்க உதவி கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் தீயணைப்புத்துறையினர், கிணற்றில் விழுந்த மாட்டை மீட்டனர். ஆனால், பசு மாடு ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்திருந்தது.
தீயணைப்புத் துறையினர் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இறந்த மாட்டை மீட்கும் போது, ஒரு காவலரின் காலில் கட்டுவிரியன் பாம்பு சுற்றிக் கொண்டுதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.