கோவை மாவட்டம் காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏசி வென்டிலேட்டர் வழியே துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர் சுமார் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணைக் காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்டமாக அந்த கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது.
மேலும் கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளை திருடியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கடையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், 'ஒருவர் மட்டுமே உள்ளே புகுந்து நகைக் கடையில் கொள்ளை அடித்துள்ளது தெரியவந்துள்ளது. தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையன் பிடிபடுவார்' என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் மீது தருமபுரி மாவட்டத்தில் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீசார் இவரைத் தேடி வருவதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் ஆனைமலைக்கு விரைந்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரது வீட்டிலும், அவரது நண்பர் சுரேஷ் என்பவர் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த கொள்ளையன் விஜயகுமார் வீட்டில் இருந்தும், ஆனைமலையில் உள்ள அவரது நண்பர் சுரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொள்ளை போன 48 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நகைகளை பறிமுதல் செய்த போலீசார் கொள்ளையன் விஜயகுமாரையும், அவரது நண்பர் சுரேஷையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதே சமயம் இவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.